செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சிறுகதைப் போட்டி : கால நீட்டிப்பு

பெருவாரியானோரின் விருப்பத்திற்காக சிறுகதைப் போட்டிக்கான கதைகளை அனுப்பும் தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நன்றி,
உதிர்ப்போம் குழு

திங்கள், 26 செப்டம்பர், 2016

காதல் கடிதம் : கவிதை



அனுப்புனர் –
சோ.விமலன்,
S/o நா.சோலைமலை, திண்டுக்கல்-624003,

பெறுநர் -
அப்பா ,
????,
????.

அன்புள்ள அப்பா,

இது மகன் தந்தைக்கு எழுதும் ஒரு காதல் கடிதம் ,
ஆனால்
கடிதத்தை பெற அவர் இல்லாததால் இது ஒரு கானல் கடிதம்...!

கடன் தொல்லையால் நீ செய்து கொண்டாய் தற்கொலை..!
உன்னுடைய பிரிவை விவரிக்க நான் தேடுகிறேன் சொற்களை..!

பணம் இல்லாத காரணத்தால் நீ ஒரு கடனாளி..!
நீ இல்லாத காரணத்தால் கண்ணீரில் கழிகிறது என் நாழி..!

நீ என்னை ஒரு போதும் திட்டியதில்லை கோவமாக..!
அதனால் தான் உன்னுடைய இழப்பு எனக்கு ஆனது சாபமாக..!

நீ நினைத்திருந்தால், ஓடி இருக்கலாம் மதுவின் மயக்கம் தேடி,
வாடி இருக்கலாம் புகையின் பூரணம் பாடி..!
ஆனால்
நீ ஓடியதோ குடும்பத்தின் இன்பத்தை காக்க,
நீ வாடியதோ குடும்பத்தின் கடனை போக்க..!

உண்ண மறந்தாலும் உழைக்க மறக்காத ஒரு பிறவி..!
உன் பிரிவால் உண்ணாமல் உழைக்காமல் இருக்கிறாள் உன் இறைவி..!

நான் பெருமையாகக் கூறுவேன் நான் ஒரு உழைப்பாளியின் மகன் என்று,
அதற்கு நீ தட்டிக் கொடுக்க வேண்டும் என் அருகில் நின்று..!

இல்லை என்று வருபவரிடம் இல்லை என்று சொல்லாத ஒரு நல்ல குணம்..!
நீ இம்மண்ணை விட்டு பிரிகையுள் உன்னிடம் இருந்தது 11 ரூபாய் பணம்..!
நீ செய்த தர்மமும் உன் தலையைக் காக்கவில்லை
நீ செய்த புண்ணியமும் உன் கணக்கில் சேர்க்கவில்லை..!

18 ஆண்டுகள் சபரிமலை சென்றதால் நீ குருசாமி..!
ஆனால்
உன்னுடைய உயிரை காக்கவில்லை ஒருசாமி..!

நான் இந்த கடிதத்தை கண்ணீர் வராமல் எழுத நினைத்தேன், ஆனால் என்னால்
முடியவில்லை..!

எனக்கு பெயர் வைத்த என் தந்தைக்கு இதை அனுப்ப பெறுநர் முகவரி எனக்கு
தெரியவில்லை..!


இப்படிக்கு,
கண்ணீருடன் காதலன்.


எழுதியது - சோ. விமலன்

வியாழன், 8 செப்டம்பர், 2016

தமிழ் எழுத்து - ஒரே குஷ்டமப்பா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன், தமிழில் எழுதி எவ்வளவு நாட்கள் இருக்கும் என்று நினைத்து, எழுதிப் பார்க்க நினைத்தேன்.  எழுத நினைத்தால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.  முதலில் என் பெயரை எழுதினேன்.  கோடை விடுமுறை முடிந்து, எழுதத் தொடங்கும் போது, எழுத மறுக்கும் விரல்களைப் போல, அப்போது என் விரல்களை உணர்ந்தேன்.  எனக்கு பெரும் பயத்தை அளித்தது, அது.  அதை அப்படியே தொடரவிடக்கூடாது என, நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தைத் தொடங்கினேன்.  அது மை ஊற்றும் பேனாவின் மீதான மோகத்தால் ஒன்றரை ஆண்டுகள் தாக்குப் பிடித்தது.  இப்போது பெங்களூர் வந்தபின், சுத்தமாக எழுதவேயில்லை.  மீண்டும் பேனாவை எடுத்துப் பார்த்தேன்.  முடியவில்லை.

இப்போது ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.   ஜெயமோகன் எழுத்துரு பற்றி, தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதினார்.  அதில் தமிழை அப்படியே ஆங்கிலத்தில், அதாவது ஆங்கில எழுத்துருவில் எழுதினால் என்ன தவறு என்று.  அதாவது, நாம் இப்போது குறுஞ்செய்தியில் / வாட்ஸ்-ஆப்-ல் அனுப்புவது போல.  நம் ஆட்கள் கும்மி எடுத்து விட்டார்கள்.  தமிழை அழிக்க யோசனை சொல்லிவிட்டான் மலையாளத்தான் என்றெல்லாம்.  கூட்டம் கூடினால் கூட்டத்தோடு கூடி அடித்துத் தள்ளுவதில் நம் ஆட்கள் தான் கில்லாடிகள் ஆயிற்றே.  அது சரியா இல்லை தவறா என்றெல்லாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்.  ஆனால் அவருக்குத் தோன்றியதை அவர் சொல்லியிருக்கிறார்.  மலாய் மொழி அப்படி வெற்றிகரமாக இயங்கிவருகிறது என்று சொல்லியிருக்கிறார்.  அவர் சொல்லிய தரவுகள், கருத்துக்கள் இவற்றின் மீது தவறு இருப்பின் அவற்றை இன்னொரு கட்டுரையின் மூலம் அவரை அறைந்திருக்கலாம், வெறுமனே வசை பொழிவதை விடுத்து.

எனக்கும் அந்தக் கட்டுரையை வாசித்தபின் பெரும் மனக் கசப்பு அல்லது வருத்தம் அவர் மேல் வந்தது.  தமிழனின் ஆதார உணர்ச்சி அது.  இது கிட்டத்தட்ட தாழ்வுணர்ச்சிக்கு நிகரானது.  நாம் நம்பும் ஒன்றுக்கு மாறாய் யாரேனும் ஏதாகிலும் சொல்லிவிட்டால், சட்டென்று வரும் உயிர்விசை.  அது ஒரு வினைக்கான விசையாய் இருத்தல் வேண்டும், ஆனால் நிலைமை அப்படி அல்லவே.  நமக்கு ஒவ்வாததை ஒருவன் சொல்லிவிட்டால் அவனை எதிரி என்றே எண்ணத் துணிய நம் மனம் பழக்கப்பட்டிருக்கிறது.  இதை மாற்ற இன்னும் இரு பத்தாண்டுகளுக்கு மேலாகவாவது ஆகும், அதுவும் தொடர்ச்சயான வாசிப்பு மற்றும் விவாத மனநிலை கொண்ட ஒரு பெரும் கூட்டம் இருந்தால் மட்டும்.  அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

அதையெல்லாம் விடுவோம்.  இப்போது நம் வீடுகளில், அலுவலகங்களில், பிற இடங்களில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.  என் வீட்டில், அம்மா வழியில் சகோதர மற்றும் மாமன் மக்கள் என்று மொத்தம் ஒன்பது பேர்.  கடைசி இருவரைத் தவிர்த்து, நாங்கள் எல்லோரும் தமிழ் வழிக்கல்வி.  முதல் ஏழு அல்லது எட்டுப் பேர் தமிழைத் தடையற வாசிப்போம்.  கடையிருவர் முறையே ஆங்கில மற்றும் சி.பி.எஸ்.சி வழியில் படிக்கின்றனர்.  ஆங்கில அல்லது சி.பி.எஸ்.சி வழிக்கல்வியில் பிராந்திய மொழிக்கு உரிய முக்கியத்துவம் இல்லை.  அவரவர் கல்விக் கொள்கை அவரவர்க்கு.  ஆனால், அங்கிருந்து வரும் பிள்ளைகள் ஆங்கிலம் தவிர்த்து, சரளமாக வாசிப்பு மற்றும் எழுதுவதில் தடுமாறுவர்.  என் வீட்டில் உள்ள அந்த கடைசி இருவரை ஆங்கில வழிக்கல்விக்குத் தள்ளியது எது?  சமூக நிர்பந்தம் எனில், சமூகம் என்பது எது?  இத்தனைக்கும் மீதமுள்ள எல்லோரும் தமிழ் வழியில் பயின்றோம்.  என் தாத்தாவும் ஆயாவும் படிக்கவில்லை.  எனவே பிள்ளைகள் அனைவரையும் படிக்க வைத்தனர்.  என் அம்மா மற்றும் பெரிய மாமாவைத் தவிர, மீதமுள்ள எல்லோரும் ஆசிரியர்கள்; தமிழ்வழிக் கல்வியில் பயின்ற ஆசிரியர்கள்.  தமிழ்வழிக் கல்வியின் அனைத்து நற்சுவைகளையும் மகிழ்ச்சிகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்த அந்தத் தலைமுறை, அடுத்த தலைமுறையை, பெட்டிக்குள் அடைக்கிறோம் என்று தெரிந்தும், வெகுசிரத்தையோடு, நன்மை தரும் என்று நம்பிக் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள்.  அது எழுத்துப் பயிற்சியை மூன்று மொழிகளில் அளிக்க முயற்சிக்கிறது  ஆங்கிலம், தமிழ் , ஹிந்தி / சம்ஸ்கிருதம் என்று.  குழந்தைகளுக்கு கொஞ்சம், இல்லை இல்லை அதிகமாகவே கடினம்.  இதுபோன்ற நேரங்களில் ஆங்கிலம் மட்டுமே போதுமானதாகத் தோன்றும்.  அதுவே வழக்கத்தில் சரியாகவும் இருப்பதாகத் தோன்றும்.  மாநில / தாய் மொழியைக் கற்றுக் கொள்ளாமலேயே(இங்கு 35-40% தேர்ச்சி மதிப்பெண் கொண்டு, மொழியறிவு உள்ளதாகக் கொள்ளுவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.) பட்டம் பெற்று, வேலை வாங்க முடியும். அதுவே "உன்னத வாழ்க்கை" என்று நம்பப்படுகிறது.

கல்லூரியில் இளம் அறிவியல் பட்டத்தின் போது, என் நண்பன் ஜோன்ஸ் - தமிழ்க்காரன், ஊட்டியில் கான்வென்ட் கல்வி கற்றவன்.  அந்த ஊர்க்காரன் தான்.  நன்றாகத் தமிழ் பேசுவான், இங்கு 'பேசுவான்' என்பது 'பீட்டர் விடுவான்' என்ற வகையிலும் சேரலாம் என்றறிக.  அது சரி, யார்தான் தமிழைத் தமிழ் போலப் பேசுகிறோம். அவனுக்கு படிக்கவும் தெரியும்.  ஆனால் வாசிக்கத் தெரியாது என்று காண்பிப்பதற்காகவே தவறாகவே வாசிப்பான்.  'சென்றான்' என்பதை சரியாக 'சென்றேன்' என்று வாசித்து, பின் வேண்டும் என்றே 'சொன்றான்' என்று வாசிப்பான்.  அது தனக்கு தமிழ் சரியாக வராது என்பதைக் காட்டுவதற்காக, இது எங்களுக்கும் தெரியும்.  அதனால் 'புகைச்சல்' என்ற பட்டப்பெயரையும் பெற்றான்.  ஒருமுறை ஏதோ மொழி தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்போது சுற்றிலும் எல்லோரும் பாய்ந்து அவனை அடிப்பது போல், தமிழைத் தாங்குவதற்காகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அவன் ஆங்கிலம் தான் 'உசத்தி' என்கிற வகையில் பேசிக் கொண்டிருந்தான்.  மீதமுள்ள அனைவரும் தமிழ் தான் என்று கூவிக் கொண்டிருந்தோம்.  அந்தக் கூச்சலில் 'அவனைப் போல் நமக்கு ஆங்கிலம் வரவில்லையே' என்ற கடுப்பும் கலந்திருந்தது.  ஒருகட்டத்தில் மிக சூடான ஒருவார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன்.  கனத்த மௌனம்.  கணநேரத்தில் என்னை நோக்கி அடிக்கப் பாய்ந்தான்.  அதை எதிர்பார்த்ததைப் போல, நான் பாய்ந்து அவனுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.  என்னைப் பிடிக்க முடியாவிட்டாலும், எட்டி அவன் வலது கையால் என் முதுகில் ஒன்று வைத்தான்.  அதன் எரிச்சலை, இதற்குமேல் இவனிடம்  அடிவாங்க முடியாது என்று உணர்ந்த என் மூளை,  மிகத்துரிதமாக அட்ரிலீனைச் சுரக்க, நான் மிக விரைவாக எங்கள் அறைக்குள் புகுந்து, கதவை அடைத்துக் கொண்டேன்.  'தடார் தடார்' என கதவை அறைந்தான் கொஞ்ச நேரம்.  பின் போய்விட்டான்.  இருவரும் ஒரே அறை.  15 நிமிடங்களுக்குப் பின், சமாதனமாகிவிட்டாயிற்று.  பிறகு அன்று முதல் இன்று வரை தமிழ்-ஆங்கிலம் எது உயர்வு என்ற விவாதம் வரும் போதெல்லாம் இருவரும் அமைதியாய் ஒரு புன்னகையோடு இருப்போம்.  அவனில்லாத போது நானும், நானில்லாத போது அவனும் தத்தம் வாதங்களைச் சொல்லிக் கொண்டிருப்போம்.  அதேநேரத்தில், ஜோசப் டாமினிக் டொமினல்(Joseph Domnic Dumnel) என்ற ஆங்கிலோ-இந்தியப் பையன், ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தான்.  அவன் குடும்பப் பெயரை 'டுமீல் டுமீல்' என்று சொல்லி கிண்டலடிப்போம்.  நான் முதன்முதலில் பார்க்கும் ஆங்கிலோ-இந்தியன்.  தெளிவாகத் தமிழ் பேசுவான்.  வாரமலரை எடுத்து வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப்பான்.  மாமா என்றால் ஆங்கிலத்தில் அம்மாவை அழைப்பது அப்படி என்று அவன் பேசும் போது தான் கவனித்து தெரிந்து கொண்டேன்.  அவனிடம் 'எப்டி டாம்னித் தமிழ்லாம் வாசிக்கிற' என்றதற்கு, 'ஸ்கூல்ல ப்ரண்ட்ஸ் கூட பேசி அப்டியே வந்திருச்சுடா' என்றான்.  அவன் வீட்டிலும் பள்ளியிலும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை.  ஆனாலும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவன் தன் முனைப்பால் கற்றுக் கொண்டது.  எழுதுவாயா என்று கேட்டதற்கு, இல்லை அது மட்டும் கஷ்டம் என்று சொன்னான்.  எழுத்துக்களை வடிவம் கடினமாக இருக்கிறது என்றும் தான் பழக முயன்று கொண்டு இருப்பதாகவும் சொல்லியிருந்தான்.

இதிலிருந்து எனக்கு இருமுனைகள் தெரிகின்றது.  ஒன்று தமிழ் தெரிந்த சூழலில் பிறந்து வளர்ந்த, தமிழால் பயனில்லை என்று வெகுவிரைவாக விலகிக் கொண்டிருக்கும் பெருவாரியான கூட்டம்.  இன்னொன்று முடிந்தவரை கற்றுக் கொள்வோம் என்று ஆசைப்பட்டு முயன்று கொண்டிருக்கும் எண்ணிக்கையில் மிக சொற்பமான கூட்டம்.  பெருவாரியான கூட்டம், பிறர் மதிக்க மாட்டார்கள், பொருளியல் ரீதியாக பயன் இல்லை என்று வெகுபாடு பட்டு விரைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.  சிறுகூட்டம், பயன் இல்லை ஆனாலும் தெரிந்து கொள்வோமே என்று படித்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் எழுத்து வடிவம் கடினமாக இருப்பதால், கற்றலின் ஆர்வம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான சூழலில் தமிழின் எழுத்தைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும்.  வாசிக்கவே உளறிக் கொண்டிருக்கும் நாம், எழுதுவதைப் பற்றி யோசனை கூடச் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.  அப்போது எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த செய்ய வேண்டியது என்ன என்று பேசியே ஆக வேண்டும்.  அதற்கு முன் ஒன்று, ஜெயமோகனைக் கும்மியது கிடக்கட்டும்.  இப்போது தொலைக்காட்சிகளில் பாடல் ஓடும் போது கீழே வரும் பாடல் வரிகள், அதற்கு நேயர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் ஆகட்டும், எப்படி வருகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  டீ-சர்ட்களில் எழுதியிருக்கும் தமிழ் வாசகங்கள் எப்படி வருகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  நண்பர்களுக்கு நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் எப்படிப் போகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில், ஆங்கில எழுத்துருவில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா இல்லையா?  விளம்பரத் தட்டிகளில் ஆங்கில எழுத்துருவின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா இல்லையா?  ஏன் இதெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல், இல்லை இல்லை, கண்டோம் ஆனால் இது நடைமுறை சாத்தியம் என்று நம்பி அதை விட்டுவிட்டோம்.  ஆனால், அதையே ஒருவன் இதையே செய்யலாம், அதனால் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கடத்துவது எளிது என்று சொன்னால் அவனைப் போட்டு கும்மி எடுப்போம்.  அதுபோகட்டும்.  எனக்கும் அவர் சொன்னது உடன்பாடு இல்லை, அதாவது ஏற்றுக் கொள்ள இயல்பான, உணர்ச்சிவசமிக்க தமிழ் மனம் ஏற்கத் தயங்குகிறது.  எனவே, அவர் சொன்னதை முறியடிக்க, நான் நாட்குறிப்பு எழுத முயன்று கொண்டிருக்கிறேன்,  குறைந்த பட்சம் நான் மட்டுமாவது , தமிழின் எழுத்தை எழுத தடுமாறாமல் இருக்க.  மாற்றம் எங்கோ எவராலோ முன்னெடுக்கப் படுவதல்ல, அதனால் பத்துவரிகளாவது நாட்குறிப்பாக தினமும் எழுதுவோமா?  இல்லை என்றால் யாராவது ஜெயமோகன் போன்ற ஜாம்பாவான்கள் இது போன்ற கருத்துக்களைக் கூறும்போது, அலறி அடித்துக் கொண்டு கத்தாமல், பணம் பழுக்க வைக்கப் பயன்படும் வேதிப்பொருள்-ஆன ஆங்கிலம் போன்ற மொழிகளை மட்டும் கற்றுக் கொண்டு, பணம் மட்டும் சம்பாதித்துக் கொண்டு 'தெய்வீக வாழ்க்கையை' வாழ்ந்து, நம் தலைமுறைகளை உய்விப்போமாக!  ஆமென்.... 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

பயிற்சிக்காய் ஒரு முயற்சி : சிறுகதைப் போட்டி

வணக்கம் நண்பர்களே!


பதிவுகள் மட்டும் இந்த வலைத்தளத்தின் நோக்கம் அல்ல.  எனவே, 'ஒரு சிறிய சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தினால் என்ன?' என்னும் யோசனை தோன்றியது.  நண்பர்களிடம் கேட்டதில், கிட்டத்தட்ட எல்லோரும் ஆமோதித்தனர்.  ஆக, ஒரு சிறுகதைப் போட்டி வைத்துக் கொள்ளலாம்.  யாரும் இங்கே நிபுணர்கள் இல்லை, மற்றும் இது நம் பயிற்சிக்காக.  தயக்கம் இன்றி அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

இதை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

விதிமுறைகள்:

  • கதைக்கான கரு  என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • 500 வார்த்தைகளாவது இருக்க வேண்டும்.  அதற்குமேல் எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.  பிற பத்திரிக்கைகளிலோ, வலைப் பக்கங்களிலோ பிரசுரிக்கப்படாதவையாக இருக்க வேண்டும்.


கதைகள் அனுப்பக் கடைசி நாள்: செப்டம்பர் 25, 2016

மூன்று பரிசுகளுக்கான கதைகள் தெரிவு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் வெளியிடப் படும்.

கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: uthirppom@gmail.com

தொடர்புக்கு: 91-8675887267



 பங்கேற்கும் அனைவருக்கும், 

பாராட்டும் வகையில், பரிசு உண்டு. 





                                                                 நன்றி மற்றும் எதிர்பார்ப்புகளோடு,



 உதிர்ப்போம் குழு.

ஞாயிறு, 3 ஜூலை, 2016

தீவிரவாதியின் மதம் தீவிரவாதம்

நேற்று டாக்காவில் ஒரு தீவிரவாத தாக்குதல், இன்று இஸ்தான்புல். நாளை எங்கோ?. முதலில் பாரிஸ், பிறகு இஸ்தான்புல், இப்போது டாக்கா.  இன்னும் நிறைய தாக்குதல்கள், மனித உயிர் பலிகள். என்னதான் வேண்டும் இந்த தீவிரவாதிகளுக்கு?  இந்த தீவிரவாதிகளுக்கு யாரு தான் பணம் கொடுகின்றனர்? எங்கிருந்து ஆயுதங்கள் கிடைகின்றன?

முதலில் இஸ்லாம் அல்லது முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. இஸ்லாம் மதத்தில் இருந்து வேறு ஒரு பரிமாணத்தை இவர்கள் உருவாக்கி உள்ளனர். அவர்கள் குரானில் இருந்து வேறு ஒரு மதத்தை உருவாக்கி உள்ளனர். ஆங்கிலத்தில் political ideology. அவர்கள் மதத்தை அரசியலிலும் மற்றும் இஸ்லாம் சம்மந்தமாக இல்லாத எந்த ஒரு பொருளும் அழிக்கப்பட வேண்டியவை என்று ஒரு பார்வை. இது எந்த ஒரு கடவுளும் கூறவில்லை எனபதே நிதர்சனம்.

இவர்களின் மனிதமும் மத பார்வைகள் வேறு. அவர்களை தீவிரவாதம் என்ற மதத்தை பின்பற்றி வருப்பவர்கள். அவர்களில் ஒரு தீவிரவாதியின் பதில், அவர்கள் தான் இஸ்லாம் மதத்தை கண்டுபித்தவர்கள், அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொல்லாம் என்று கூறினான்.  இப்படி ஒன்று குரானில் சொல்லவே இல்லை என்று கூறினார்கள் என் இஸ்லாமிய சகோதர்கள்.
தீவிரவாதிகளுக்கு அவ்ர்கள் போகுமிடம் எல்லாம் ஒரு மன்னன் போல ஆளவேண்டும். அவர்களின் உண்மையான் குறிக்கோள் இது தான். மக்கள் அவர்களின் அடிமையாக வாழவேண்டும். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. நீங்கள் மனிதர்களாக இருந்தாலே போதும் உங்கள் உயிரை அவ்ர்கள் எடுக்க. மதத்தை வைத்து மனிதர்களை ஒதுக்காதீர்கள்.

இன்னோரு தீவிரவாதம் உருவாகும் நாடு அமெரிக்கா. ஆனால் மக்களிடம் தீவிரவாதத்தை ஒழிக்க எல்லோரும் பாடுபட வேண்டும் என்று கதை சொல்லி. தீவிரவாதிகளுக்கு காசும், துப்பாக்கிகளும் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.  ஆனால் மக்கள் யாரும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூற மறுக்கின்றன.  அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஏமாற்றி ஒப்பந்தம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.

ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு மற்ற நாடுகளை அடக்கி கொண்டு ஒரு மறைமுக தீவிரவாதத்தை நடத்திக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , சீனா போன்ற நாடுகள் அமைதி வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் மாதம் ஒரு முறை ஆயுத பயிற்சி நடக்கின்றது. குண்டு சோதனை நடக்கின்றது. இப்படி கூறிக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றிவருகிறது. இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம் என்று எல்லா மத நாடுகளும் மனிதர்களுக்கு எதிராகத்தான் உள்ளது. எந்த மதமும் மனிதர்களைக் கொல்ல சொல்லவில்லை. எந்த கடவுளும் சொல்லவில்லை.
மக்களோ பசி பட்னியில் சாகிறார்கள் அதை பற்றி கவலைப்பட ஒரு நாடும் இல்லை. இதில் இவர்கள் தீவிரவாதிகளை ஒடுக்கப் போகறார்களாம்.
மனிதர்களே மதத்தை கொல்கின்றன. மனிதர்களே மனிதனை கொல்கிறார்கள்.

தீவிரவாதிகளைவிட, மக்களை ஏமாற்றும் சில மனிதர்களை தான் உண்மையான தீவிரவதிகள்.
கடவுள்களின் பெயரில் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த தீவிரவாதிகள்.
தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, மனிதமும் கிடையாது.

~அனந்த் வீரா~

சனி, 2 ஜூலை, 2016

அப்பாவும் நானும் மற்றும் என் நட்பும்

சற்றும் இந்த பெயரை பார்த்த பின்பு என்னால் என்னை கட்டுப்படுத்த இயலவில்லை. ஆம், அப்பா என்கிற பெயரை பார்த்த பின்பு, எதோ ஒன்று என்னை இந்த படம் பார்க்க வேண்டும் என்று சொன்னது.
நான் அப்பாவை மிகச்சரியாக அறியாதவன். என்னுள் ஏதோ ஒரு பேரலை. அவரோடு வாழ்ந்த சிறிய நாட்கள் ஞாபகம் வந்தது.  சமுத்திரக்கனியை  படத்தில் பார்க்கும் போது என் அப்பா இப்படி ஒரு மனிதராய் தான் இருந்திருக்கலாம். என் அம்மா கூறிய சில கருத்துக்கள் என் அப்பாவைப்பற்றி, சொன்னதை வைத்து, ஒரு கோடு போட்டு பார்த்ததில் அவர் இப்படி தான் இருந்திருப்பார் என்று யூகிக்கமுடித்தது.

பள்ளிநாட்களில் இப்படி தான் என்று  வாழ்ந்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். ஆனால் பள்ளியில் இப்படியும் கற்று கொடுக்கலாம் அப்பா படம். வாழ்க்கையில் நண்பர்களை தேடியிருக்கிறேன். பள்ளியில் சில பேர் கல்லுரியில் சில பேர், வேலையில் சில பேர், வாழ்க்கையில் சில பேர் என்று ஒரு சிறிய வட்டம் எனது நண்பர்கள் குடும்பம்.

'ஏன் இந்த படம் எனக்கு பிடித்தது?' என்று கேள்வி. படத்தில் வந்த சில கட்சிகள் நான் எப்படி வளர்க்க ஆசைப்படுகிறேனோ அப்படி இருந்தது. மிக சரியான நட்பு வட்டாரம் வேண்டும் ஒருவன் நல்லவனாக வாழ. எனக்கும் அப்படி ஒரு குடும்பம்.

உணவை தேடி அலையும் போதுகூட, நான் என் நண்பர்கள் பிடியில் இருந்திருக்கிறேன். அவர்கள் சாப்பாட்டை கூட என்னை சாப்பிடவைத்து அழகு பார்த்த என் ஞாபகங்கள். என் அம்மாவிடம் நான் பேசியதை விட அவர்களிடம் பேசியது தான் அதிகம். சில நண்பர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் எப்போதும்.

படத்தை பத்தி எழுத ஆசைப்பட்டேன்.  ஆனால், சில நேரம் பிம்பத்தை விட நிஜத்தை பேச ஆசைப்பட்டேன்.  நான் நன்றி கூற ஆசைப்படுகிறேன் சமுத்திரக்கனிக்கு, எனக்கு சில நியபகங்களை குடுத்ததற்காக. என் நண்பர்களை பற்றியும் என் அப்பாவை பற்றியும் நினைவுடியதற்காக.
அப்பா என் கனவில் ஒருவர், நண்பர்.  நண்பர்கள் என் நிஜத்தில் அப்பாக்கள்.

~ஆனந்த் வீரா~

வெள்ளி, 1 ஜூலை, 2016

ஒரு சிறிய தூக்கம்

தூங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன கனவு. மதியம் ஒன் இந்தியா இணையத் தளத்தில் படித்த ஸ்வாதி இறப்பின் ஒரு பகிர்வு. அதை நேரில் கண்ட ஒரு மனிதரின் வாக்குமூலம். அவர் கூறிய சில தகவல்கள் என்னை எழுப்பியதா இல்லை, அங்கே மரணத்தின் ஓலம் என்னை எழுப்பியதா எனறு ஒரு யோசனை.
அவர் எப்பொழுதும் போல காலை 6.30 மணிக்கு ரயில் நிலையத்துக்கு வந்து அடைந்தார். என்றும் போல் ரயில் வருவதுக்கான நேரம். திடீர் என்று சதக் சதக் என்று ரெண்டு சத்தம். ஒரு பெண்ணின் மரண ஓலம். அதிர்ச்சி, அங்கு இருந்த எல்லா மக்களுக்கும். மூன்று நிமிடம் அவள் துடித்தாள். பிறகு பக்கத்தில் நின்ற ஒரு பெண் "அவ்வளவுதான்" என்ற சொல் மட்டும் கேட்டது அவர் காதுகளில்.
ஒரு பெண்ணின் கனவுகள், அவள் குடுபத்தின் கனவுகள் மறைந்தது அந்த மூன்று நிமிடங்களில். சட்டென்று என் தூக்கத்தை எழுப்பியது அவளின் சத்தமா இல்லை வேறு யாருக்கும் நடந்துவிடுமோ என்ற பயமா, தெரிய வில்லை.
எனது பெண் நண்பர்களிடம் ஸ்வாதியின் இறப்பு பற்றி கேட்டபோது. அவர்களிடம் கோபத்தை விட பயம் மட்டுமே நான் அறிந்தது.
இந்த பயத்தை போக்க கபாலி ரஜினி வருவாரா இல்லை விஜய் அல்லது அஜித் வருவார்களா என்று தெரிய வில்லை. ஒன்று ஸ்வாதி மரண ஓலம் மக்கள் வெகு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்.
~ ஆனந்த் வீரா ~