செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சிறுகதைப் போட்டி : கால நீட்டிப்பு

பெருவாரியானோரின் விருப்பத்திற்காக சிறுகதைப் போட்டிக்கான கதைகளை அனுப்பும் தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நன்றி,
உதிர்ப்போம் குழு

திங்கள், 26 செப்டம்பர், 2016

காதல் கடிதம் : கவிதை



அனுப்புனர் –
சோ.விமலன்,
S/o நா.சோலைமலை, திண்டுக்கல்-624003,

பெறுநர் -
அப்பா ,
????,
????.

அன்புள்ள அப்பா,

இது மகன் தந்தைக்கு எழுதும் ஒரு காதல் கடிதம் ,
ஆனால்
கடிதத்தை பெற அவர் இல்லாததால் இது ஒரு கானல் கடிதம்...!

கடன் தொல்லையால் நீ செய்து கொண்டாய் தற்கொலை..!
உன்னுடைய பிரிவை விவரிக்க நான் தேடுகிறேன் சொற்களை..!

பணம் இல்லாத காரணத்தால் நீ ஒரு கடனாளி..!
நீ இல்லாத காரணத்தால் கண்ணீரில் கழிகிறது என் நாழி..!

நீ என்னை ஒரு போதும் திட்டியதில்லை கோவமாக..!
அதனால் தான் உன்னுடைய இழப்பு எனக்கு ஆனது சாபமாக..!

நீ நினைத்திருந்தால், ஓடி இருக்கலாம் மதுவின் மயக்கம் தேடி,
வாடி இருக்கலாம் புகையின் பூரணம் பாடி..!
ஆனால்
நீ ஓடியதோ குடும்பத்தின் இன்பத்தை காக்க,
நீ வாடியதோ குடும்பத்தின் கடனை போக்க..!

உண்ண மறந்தாலும் உழைக்க மறக்காத ஒரு பிறவி..!
உன் பிரிவால் உண்ணாமல் உழைக்காமல் இருக்கிறாள் உன் இறைவி..!

நான் பெருமையாகக் கூறுவேன் நான் ஒரு உழைப்பாளியின் மகன் என்று,
அதற்கு நீ தட்டிக் கொடுக்க வேண்டும் என் அருகில் நின்று..!

இல்லை என்று வருபவரிடம் இல்லை என்று சொல்லாத ஒரு நல்ல குணம்..!
நீ இம்மண்ணை விட்டு பிரிகையுள் உன்னிடம் இருந்தது 11 ரூபாய் பணம்..!
நீ செய்த தர்மமும் உன் தலையைக் காக்கவில்லை
நீ செய்த புண்ணியமும் உன் கணக்கில் சேர்க்கவில்லை..!

18 ஆண்டுகள் சபரிமலை சென்றதால் நீ குருசாமி..!
ஆனால்
உன்னுடைய உயிரை காக்கவில்லை ஒருசாமி..!

நான் இந்த கடிதத்தை கண்ணீர் வராமல் எழுத நினைத்தேன், ஆனால் என்னால்
முடியவில்லை..!

எனக்கு பெயர் வைத்த என் தந்தைக்கு இதை அனுப்ப பெறுநர் முகவரி எனக்கு
தெரியவில்லை..!


இப்படிக்கு,
கண்ணீருடன் காதலன்.


எழுதியது - சோ. விமலன்

வியாழன், 8 செப்டம்பர், 2016

தமிழ் எழுத்து - ஒரே குஷ்டமப்பா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன், தமிழில் எழுதி எவ்வளவு நாட்கள் இருக்கும் என்று நினைத்து, எழுதிப் பார்க்க நினைத்தேன்.  எழுத நினைத்தால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.  முதலில் என் பெயரை எழுதினேன்.  கோடை விடுமுறை முடிந்து, எழுதத் தொடங்கும் போது, எழுத மறுக்கும் விரல்களைப் போல, அப்போது என் விரல்களை உணர்ந்தேன்.  எனக்கு பெரும் பயத்தை அளித்தது, அது.  அதை அப்படியே தொடரவிடக்கூடாது என, நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தைத் தொடங்கினேன்.  அது மை ஊற்றும் பேனாவின் மீதான மோகத்தால் ஒன்றரை ஆண்டுகள் தாக்குப் பிடித்தது.  இப்போது பெங்களூர் வந்தபின், சுத்தமாக எழுதவேயில்லை.  மீண்டும் பேனாவை எடுத்துப் பார்த்தேன்.  முடியவில்லை.

இப்போது ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.   ஜெயமோகன் எழுத்துரு பற்றி, தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதினார்.  அதில் தமிழை அப்படியே ஆங்கிலத்தில், அதாவது ஆங்கில எழுத்துருவில் எழுதினால் என்ன தவறு என்று.  அதாவது, நாம் இப்போது குறுஞ்செய்தியில் / வாட்ஸ்-ஆப்-ல் அனுப்புவது போல.  நம் ஆட்கள் கும்மி எடுத்து விட்டார்கள்.  தமிழை அழிக்க யோசனை சொல்லிவிட்டான் மலையாளத்தான் என்றெல்லாம்.  கூட்டம் கூடினால் கூட்டத்தோடு கூடி அடித்துத் தள்ளுவதில் நம் ஆட்கள் தான் கில்லாடிகள் ஆயிற்றே.  அது சரியா இல்லை தவறா என்றெல்லாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்.  ஆனால் அவருக்குத் தோன்றியதை அவர் சொல்லியிருக்கிறார்.  மலாய் மொழி அப்படி வெற்றிகரமாக இயங்கிவருகிறது என்று சொல்லியிருக்கிறார்.  அவர் சொல்லிய தரவுகள், கருத்துக்கள் இவற்றின் மீது தவறு இருப்பின் அவற்றை இன்னொரு கட்டுரையின் மூலம் அவரை அறைந்திருக்கலாம், வெறுமனே வசை பொழிவதை விடுத்து.

எனக்கும் அந்தக் கட்டுரையை வாசித்தபின் பெரும் மனக் கசப்பு அல்லது வருத்தம் அவர் மேல் வந்தது.  தமிழனின் ஆதார உணர்ச்சி அது.  இது கிட்டத்தட்ட தாழ்வுணர்ச்சிக்கு நிகரானது.  நாம் நம்பும் ஒன்றுக்கு மாறாய் யாரேனும் ஏதாகிலும் சொல்லிவிட்டால், சட்டென்று வரும் உயிர்விசை.  அது ஒரு வினைக்கான விசையாய் இருத்தல் வேண்டும், ஆனால் நிலைமை அப்படி அல்லவே.  நமக்கு ஒவ்வாததை ஒருவன் சொல்லிவிட்டால் அவனை எதிரி என்றே எண்ணத் துணிய நம் மனம் பழக்கப்பட்டிருக்கிறது.  இதை மாற்ற இன்னும் இரு பத்தாண்டுகளுக்கு மேலாகவாவது ஆகும், அதுவும் தொடர்ச்சயான வாசிப்பு மற்றும் விவாத மனநிலை கொண்ட ஒரு பெரும் கூட்டம் இருந்தால் மட்டும்.  அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

அதையெல்லாம் விடுவோம்.  இப்போது நம் வீடுகளில், அலுவலகங்களில், பிற இடங்களில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.  என் வீட்டில், அம்மா வழியில் சகோதர மற்றும் மாமன் மக்கள் என்று மொத்தம் ஒன்பது பேர்.  கடைசி இருவரைத் தவிர்த்து, நாங்கள் எல்லோரும் தமிழ் வழிக்கல்வி.  முதல் ஏழு அல்லது எட்டுப் பேர் தமிழைத் தடையற வாசிப்போம்.  கடையிருவர் முறையே ஆங்கில மற்றும் சி.பி.எஸ்.சி வழியில் படிக்கின்றனர்.  ஆங்கில அல்லது சி.பி.எஸ்.சி வழிக்கல்வியில் பிராந்திய மொழிக்கு உரிய முக்கியத்துவம் இல்லை.  அவரவர் கல்விக் கொள்கை அவரவர்க்கு.  ஆனால், அங்கிருந்து வரும் பிள்ளைகள் ஆங்கிலம் தவிர்த்து, சரளமாக வாசிப்பு மற்றும் எழுதுவதில் தடுமாறுவர்.  என் வீட்டில் உள்ள அந்த கடைசி இருவரை ஆங்கில வழிக்கல்விக்குத் தள்ளியது எது?  சமூக நிர்பந்தம் எனில், சமூகம் என்பது எது?  இத்தனைக்கும் மீதமுள்ள எல்லோரும் தமிழ் வழியில் பயின்றோம்.  என் தாத்தாவும் ஆயாவும் படிக்கவில்லை.  எனவே பிள்ளைகள் அனைவரையும் படிக்க வைத்தனர்.  என் அம்மா மற்றும் பெரிய மாமாவைத் தவிர, மீதமுள்ள எல்லோரும் ஆசிரியர்கள்; தமிழ்வழிக் கல்வியில் பயின்ற ஆசிரியர்கள்.  தமிழ்வழிக் கல்வியின் அனைத்து நற்சுவைகளையும் மகிழ்ச்சிகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்த அந்தத் தலைமுறை, அடுத்த தலைமுறையை, பெட்டிக்குள் அடைக்கிறோம் என்று தெரிந்தும், வெகுசிரத்தையோடு, நன்மை தரும் என்று நம்பிக் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள்.  அது எழுத்துப் பயிற்சியை மூன்று மொழிகளில் அளிக்க முயற்சிக்கிறது  ஆங்கிலம், தமிழ் , ஹிந்தி / சம்ஸ்கிருதம் என்று.  குழந்தைகளுக்கு கொஞ்சம், இல்லை இல்லை அதிகமாகவே கடினம்.  இதுபோன்ற நேரங்களில் ஆங்கிலம் மட்டுமே போதுமானதாகத் தோன்றும்.  அதுவே வழக்கத்தில் சரியாகவும் இருப்பதாகத் தோன்றும்.  மாநில / தாய் மொழியைக் கற்றுக் கொள்ளாமலேயே(இங்கு 35-40% தேர்ச்சி மதிப்பெண் கொண்டு, மொழியறிவு உள்ளதாகக் கொள்ளுவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.) பட்டம் பெற்று, வேலை வாங்க முடியும். அதுவே "உன்னத வாழ்க்கை" என்று நம்பப்படுகிறது.

கல்லூரியில் இளம் அறிவியல் பட்டத்தின் போது, என் நண்பன் ஜோன்ஸ் - தமிழ்க்காரன், ஊட்டியில் கான்வென்ட் கல்வி கற்றவன்.  அந்த ஊர்க்காரன் தான்.  நன்றாகத் தமிழ் பேசுவான், இங்கு 'பேசுவான்' என்பது 'பீட்டர் விடுவான்' என்ற வகையிலும் சேரலாம் என்றறிக.  அது சரி, யார்தான் தமிழைத் தமிழ் போலப் பேசுகிறோம். அவனுக்கு படிக்கவும் தெரியும்.  ஆனால் வாசிக்கத் தெரியாது என்று காண்பிப்பதற்காகவே தவறாகவே வாசிப்பான்.  'சென்றான்' என்பதை சரியாக 'சென்றேன்' என்று வாசித்து, பின் வேண்டும் என்றே 'சொன்றான்' என்று வாசிப்பான்.  அது தனக்கு தமிழ் சரியாக வராது என்பதைக் காட்டுவதற்காக, இது எங்களுக்கும் தெரியும்.  அதனால் 'புகைச்சல்' என்ற பட்டப்பெயரையும் பெற்றான்.  ஒருமுறை ஏதோ மொழி தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்போது சுற்றிலும் எல்லோரும் பாய்ந்து அவனை அடிப்பது போல், தமிழைத் தாங்குவதற்காகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அவன் ஆங்கிலம் தான் 'உசத்தி' என்கிற வகையில் பேசிக் கொண்டிருந்தான்.  மீதமுள்ள அனைவரும் தமிழ் தான் என்று கூவிக் கொண்டிருந்தோம்.  அந்தக் கூச்சலில் 'அவனைப் போல் நமக்கு ஆங்கிலம் வரவில்லையே' என்ற கடுப்பும் கலந்திருந்தது.  ஒருகட்டத்தில் மிக சூடான ஒருவார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன்.  கனத்த மௌனம்.  கணநேரத்தில் என்னை நோக்கி அடிக்கப் பாய்ந்தான்.  அதை எதிர்பார்த்ததைப் போல, நான் பாய்ந்து அவனுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.  என்னைப் பிடிக்க முடியாவிட்டாலும், எட்டி அவன் வலது கையால் என் முதுகில் ஒன்று வைத்தான்.  அதன் எரிச்சலை, இதற்குமேல் இவனிடம்  அடிவாங்க முடியாது என்று உணர்ந்த என் மூளை,  மிகத்துரிதமாக அட்ரிலீனைச் சுரக்க, நான் மிக விரைவாக எங்கள் அறைக்குள் புகுந்து, கதவை அடைத்துக் கொண்டேன்.  'தடார் தடார்' என கதவை அறைந்தான் கொஞ்ச நேரம்.  பின் போய்விட்டான்.  இருவரும் ஒரே அறை.  15 நிமிடங்களுக்குப் பின், சமாதனமாகிவிட்டாயிற்று.  பிறகு அன்று முதல் இன்று வரை தமிழ்-ஆங்கிலம் எது உயர்வு என்ற விவாதம் வரும் போதெல்லாம் இருவரும் அமைதியாய் ஒரு புன்னகையோடு இருப்போம்.  அவனில்லாத போது நானும், நானில்லாத போது அவனும் தத்தம் வாதங்களைச் சொல்லிக் கொண்டிருப்போம்.  அதேநேரத்தில், ஜோசப் டாமினிக் டொமினல்(Joseph Domnic Dumnel) என்ற ஆங்கிலோ-இந்தியப் பையன், ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தான்.  அவன் குடும்பப் பெயரை 'டுமீல் டுமீல்' என்று சொல்லி கிண்டலடிப்போம்.  நான் முதன்முதலில் பார்க்கும் ஆங்கிலோ-இந்தியன்.  தெளிவாகத் தமிழ் பேசுவான்.  வாரமலரை எடுத்து வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப்பான்.  மாமா என்றால் ஆங்கிலத்தில் அம்மாவை அழைப்பது அப்படி என்று அவன் பேசும் போது தான் கவனித்து தெரிந்து கொண்டேன்.  அவனிடம் 'எப்டி டாம்னித் தமிழ்லாம் வாசிக்கிற' என்றதற்கு, 'ஸ்கூல்ல ப்ரண்ட்ஸ் கூட பேசி அப்டியே வந்திருச்சுடா' என்றான்.  அவன் வீட்டிலும் பள்ளியிலும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை.  ஆனாலும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவன் தன் முனைப்பால் கற்றுக் கொண்டது.  எழுதுவாயா என்று கேட்டதற்கு, இல்லை அது மட்டும் கஷ்டம் என்று சொன்னான்.  எழுத்துக்களை வடிவம் கடினமாக இருக்கிறது என்றும் தான் பழக முயன்று கொண்டு இருப்பதாகவும் சொல்லியிருந்தான்.

இதிலிருந்து எனக்கு இருமுனைகள் தெரிகின்றது.  ஒன்று தமிழ் தெரிந்த சூழலில் பிறந்து வளர்ந்த, தமிழால் பயனில்லை என்று வெகுவிரைவாக விலகிக் கொண்டிருக்கும் பெருவாரியான கூட்டம்.  இன்னொன்று முடிந்தவரை கற்றுக் கொள்வோம் என்று ஆசைப்பட்டு முயன்று கொண்டிருக்கும் எண்ணிக்கையில் மிக சொற்பமான கூட்டம்.  பெருவாரியான கூட்டம், பிறர் மதிக்க மாட்டார்கள், பொருளியல் ரீதியாக பயன் இல்லை என்று வெகுபாடு பட்டு விரைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.  சிறுகூட்டம், பயன் இல்லை ஆனாலும் தெரிந்து கொள்வோமே என்று படித்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் எழுத்து வடிவம் கடினமாக இருப்பதால், கற்றலின் ஆர்வம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான சூழலில் தமிழின் எழுத்தைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும்.  வாசிக்கவே உளறிக் கொண்டிருக்கும் நாம், எழுதுவதைப் பற்றி யோசனை கூடச் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.  அப்போது எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த செய்ய வேண்டியது என்ன என்று பேசியே ஆக வேண்டும்.  அதற்கு முன் ஒன்று, ஜெயமோகனைக் கும்மியது கிடக்கட்டும்.  இப்போது தொலைக்காட்சிகளில் பாடல் ஓடும் போது கீழே வரும் பாடல் வரிகள், அதற்கு நேயர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் ஆகட்டும், எப்படி வருகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  டீ-சர்ட்களில் எழுதியிருக்கும் தமிழ் வாசகங்கள் எப்படி வருகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  நண்பர்களுக்கு நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் எப்படிப் போகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில், ஆங்கில எழுத்துருவில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா இல்லையா?  விளம்பரத் தட்டிகளில் ஆங்கில எழுத்துருவின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா இல்லையா?  ஏன் இதெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல், இல்லை இல்லை, கண்டோம் ஆனால் இது நடைமுறை சாத்தியம் என்று நம்பி அதை விட்டுவிட்டோம்.  ஆனால், அதையே ஒருவன் இதையே செய்யலாம், அதனால் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கடத்துவது எளிது என்று சொன்னால் அவனைப் போட்டு கும்மி எடுப்போம்.  அதுபோகட்டும்.  எனக்கும் அவர் சொன்னது உடன்பாடு இல்லை, அதாவது ஏற்றுக் கொள்ள இயல்பான, உணர்ச்சிவசமிக்க தமிழ் மனம் ஏற்கத் தயங்குகிறது.  எனவே, அவர் சொன்னதை முறியடிக்க, நான் நாட்குறிப்பு எழுத முயன்று கொண்டிருக்கிறேன்,  குறைந்த பட்சம் நான் மட்டுமாவது , தமிழின் எழுத்தை எழுத தடுமாறாமல் இருக்க.  மாற்றம் எங்கோ எவராலோ முன்னெடுக்கப் படுவதல்ல, அதனால் பத்துவரிகளாவது நாட்குறிப்பாக தினமும் எழுதுவோமா?  இல்லை என்றால் யாராவது ஜெயமோகன் போன்ற ஜாம்பாவான்கள் இது போன்ற கருத்துக்களைக் கூறும்போது, அலறி அடித்துக் கொண்டு கத்தாமல், பணம் பழுக்க வைக்கப் பயன்படும் வேதிப்பொருள்-ஆன ஆங்கிலம் போன்ற மொழிகளை மட்டும் கற்றுக் கொண்டு, பணம் மட்டும் சம்பாதித்துக் கொண்டு 'தெய்வீக வாழ்க்கையை' வாழ்ந்து, நம் தலைமுறைகளை உய்விப்போமாக!  ஆமென்....