செவ்வாய், 8 நவம்பர், 2016

கற்பனை

ஒரு அழுகையுடன் ஒருவரின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஒரு புத்தகத்தில் படித்தது போல, நாம் பிறந்தவுடன் இறப்பை தேடி போகிறோம் அதுதான் வாழ்க்கை. வெற்றி, தோல்வி, அழுகை, சிரிப்பு எல்லாம் ஒரு அங்கம் தான். நாம் இறப்பை தேடிய பயணம் நாம் சந்திக்கும் ஒரு ஒரு தருணங்கள் எல்லாம் ஒருவரின் வாழ்க்கை சுவாரஸ்யங்கள். பிறந்தவுடன் சுதந்திரம் பிறகு மெல்ல மெல்ல தானாக மறைந்து போகும். கண்ணீருடன் சிந்திய பிறந்தநாள் நம் நாம் பெற்றோர்களுக்கு ஒரு அழகான ஒரு கற்பனை. பிறந்தவுடன் அம்மாவின் ஒரு கற்பனை, அப்பாவிற்கு ஒரு கற்பனை, ஏன் சொந்தங்களுக்கு ஒரு கற்பனை பிறந்திருக்கும் குழந்தைக்கு வரப்போகும் வாழ்க்கையில் ஒரு  கற்பனை.இதில் எதோ ஒன்று தான் வெற்றி பயணத்தில் செல்லும், முடித்த அளவு அந்த குழந்தையின் கற்பனை இறந்து போகும். நாம் முதல் இறப்பை தேடிய பயணத்தின் வெற்றி. நம் முதல் வெற்றியும் கூட இதுதான். முதலில் தவள்வது, பிறகு நடப்பது, ஓடுவது என்று வாழ்க்கை விறு விருவென ஓடுகிறது. படிக்கும் போது ஏன் என்று கேள்வி நம்மை மிகவும் கவர்ந்த வார்த்தை. ஒருவனின் தேடல் கூட இதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. தேடலில் இரண்டு வகை, ஒரு வகை தேடி சாதிப்பது, இனொன்று தேடியவனிடம் இருந்து கற்றுக்கொள்வது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நம் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் டெஸ்லா. முதல் வகை டெஸ்லா தேடி கண்டுபிடிப்பார், எடிசன் இரண்டாம் வகை. வெற்றி எடிசன் தான் ஆனால் இதில் எதை கற்று கொள்வது பெற்றோரிடம் இருந்து வருகிறது. நம் அனைவரின் வெற்றி நம் கற்பனையை அடைவது தான். அதில் முதல் வெற்றி ஒரு சிறந்த ஆசிரியர் கிடைப்பது. நீங்கள் ஜாக்கி சான் ஆவதும், ப்ரஸ் லீ ஆவதும் ஒரு ஆசிரியர் கையில். ப்ரஸ் லீ தனி திறமை , தனி சண்டை கலை, தானே கற்று கொண்டார். ஜாக்கி சான் கற்று கொண்டார் சண்டை கலை நல்ல ஆசிரியரிடம் இருந்து.

இப்படி வெற்றிகளுக்கு தேடி செல்லும் வழியில், நாம் முதலில் சாதிப்பது சாதியும், மதமும். எதோ ஒன்றிற்கு அடிமை ஆகவில்லை எனில் வாழ்க்கை சிறந்ததாக அமையாது. இது என் கருத்து. உண்மை இல்லை ஆனால் பொய்யும் இல்லை. ஒரு கிராமம் விட்டு இன்னோரு கிராமம் சென்றவுடன் கேட்கப்படும் கேள்வி நீ எந்த சாதியை சேர்ந்தவர். ஒரு நகரத்தில் இருந்து இன்னோரு நகரம் சென்றவுடன் கேட்கப்படும் கேள்வி எந்த மதம் என்று இரண்டும் சுதந்திரத்தின் முடிய கதவு. இந்த ஒன்றில் சிக்கிய பின்பு நம் வாழ்க்கை சீனா பெருணசுவர் போல நீண்டு கொண்டே போகும் அவ்வப்போது சிறு ஜன்னல்வுடன் இரு பக்கமும் சுவருடன். இதை தண்டி நம் இறப்பை தேடும் போது நாம் பார்ப்பது நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள்.  நண்பர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் உங்கள் இலக்கை நீங்கள் அடைய. உங்கள் வாழ்க்கையின் நீண்ட பயணிகள் இவர்கள். நீங்கள் துரோகங்களை எதிர் பார்க்காமல் வாழ்ந்தால் நீங்கள் மனிதன், அதை எதிர் பார்த்து வாழ்ந்தால் நியானி. அதற்கு எடுத்துக்காட்டு சொல்லிக்கொண்டே போகலாம் பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஒரு பெரிய வரலாறு உண்டு, இவர்கள் நல்ல துரோகிகள். ஒரு நல்ல நண்பன் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் இதில் சந்தோஷம், துக்கம், கருத்துகள் பரிமாற்றம், துரோகம் எல்லாம் அடங்கும்.

உண் சுதந்திரம் வேண்டும் என்று உணர்வதுக்கு நமக்கு வருடங்கள் ஆகிறது. அதிலும் நம் முதல் சுதந்திர கண்டுபிடிப்பு ன் நண்பன் வீட்டில் அவன் எங்கு வேணா செல்லலாம் , என்ன வேணா செய்யலாம் ஆனால் என்னால் ஏதும் செய்யமுடிய வில்லை. பிறகு அது சுதந்திரம் இல்லை என்று தோன்றும். தப்பு செய்யாதே என்று கூறும் ஆசிரியர் , சாலை விதிகளை பற்றி இரண்டு நாள் வகுப்பு எடுக்கும் அவர் , ஒருநாள் கூட அதை மதித்தது இல்லை. படிக்கும் போது லஞ்சம் தப்பு அதை யாரும் கொடுக்க கூடாது என்று சொல்லும் அப்பா , ஒருநாள் போலீஸில் இரனுர் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். லஞ்சம் வாங்க கூடாது என்று கூறிய அரசு அதிகாரி அன்று வாங்கினார், தப்பு செய்ய கூடாது என்று இருந்த என் கற்பனை இறந்த இனொருநாள். இப்படி இன்னோரு கற்பனை இறந்த தருணம் என் நண்பன் ஒரு பெண்ணாய் தவறாக பேசி அவளை பற்றி அவதூறாக எல்லோரிடமும் சொல்லி வந்தான். இனொருநாள் இரவு ஒரு பையன் தன் தங்கையை தப்பாக பேசினான் என்று கோவப்படு அடிக்குறான். நியாயங்கள் ஆயிரம் அவர் அவருக்கு. பெண் சுதந்திரம் வேண்டும் என்று கேள்வி பட்ட கற்பனை, ஒரு பெண் எப்போது வேண்டுமானலும் அவள் பிடித்ததை செய்ய வேண்டும், அவள் முடிவை அவள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இன்னோரு பெண், ஒரு ஆண் மது அருந்திகிறான், நானும் அருந்துவேன், ஒரு ஆணின் தப்பை பெண் செய்தால் அது சுதந்திரம் என்று கூறினாள், அப்போது தேவை இல்லை இந்த சுதந்திரம் ஆணுக்கு கூட என்று தகர்த்து என் கற்பனை.

இப்படி அடுக்கிக்கொண்டே சொல்லவேண்டும் கற்பனைகளை, ஆனால் எல்லாம் ஒரு நொடிக்குள் முடித்து இறந்துவிடும். நான் என் வீட்டிற்க்கு பயணம் செய்து கொண்டு இருந்தேன். அன்று சற்றும் அதிர்ச்சியாக ஆம்புலன்ஸ் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தது. எல்லாருக்கும் புரிந்தது எதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது என்று. பேருந்து செல்ல செல்ல கற்பனைகள் துவங்கின, ஒருவர் ஒரு பேருந்து மற்றும் லாரி மோதியது அந்த பஸ் கவுந்துவிட்டது அதனால் தான் இத்தனை ஆம்புலன்ஸ் என்று கூறினார். சற்று தூரம் சென்ற விடன் பின்னே இருந்த அம்மாக்கள் அம இந்த லாரி ஓட்டுநர்கள் இப்படி தான் வேகமாக ஓடுவார்கள். எப்போதும் மது அருந்திவிட்டு இருப்பார்கள் என்று ஒரு கற்பனை, பிறகு இனொருவர் எவன் செத்த நமக்கு என்ன அம்மா(முதலமைச்சர்) வாழ்க அம்மா இப்படி அவங்க மருத்துவமனையில் இருக்கிறது நல்லாத்தான் இப்படிலாம் நடக்குது என்று சத்தமாக கூறினார். பேருந்து மெதுவாக அந்த இடத்தை கடந்தது, ஒரு கார் மற்றும் ஒரு பைக் மோதியது, கார் தடும் மாரி கிலே இருக்கும் பள்ளம் ஒன்றில் சிறக்கிக்கொண்டது. பேருந்து சற்று வேகமாக சென்றவிடன் எல்லோரு கற்பனை இறந்தது.

கற்பனையில் உலகம் அதில் நாமும் ஒரு கற்பனை.

~மகிழ்ச்சி~
~ ஆனந்த் வீரா ~

புதன், 26 அக்டோபர், 2016

திருக்குறள்

                                                   கடவுள் வாழ்த்து

குறள் 3:


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கலைஞர் உரை:

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

திருக்குறள்

                                                 கடவுள் வாழ்த்து 

குறள் 2: 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கம் 
தன்னைவிட அறிவில் மூத்த ஒருவரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் பயன் இல்லை  .

சனி, 22 அக்டோபர், 2016

திருக்குறள்

                                              திருக்குறள்

இயற்றியவர் : திருவள்ளுவர்.

திருக்குறள்  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன

குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

விளக்கம்

எழுத்துக்களின் தொடக்கம் என்பது அகரத்தில் இருந்து தொடங்குகிறது என்பதை போல நாம் வாழும் இந்த உலகிற்கும் நிச்சயம் ஒரு தொடக்கம் அல்லது தொடங்கி வைத்தரகள் (உருவாக்கியவர்கள் )இருக்கவேண்டும் அது எந்த சக்தியாகவும் இருக்கலாம் அதனை கடவுள் என்றாலும் சரியே இல்லை ஒரு இயற்கையின் சக்தி என்றாலும் சரியே. அந்த சக்தியை தான் ஆதிபவன் என்கேறோம்.

திங்கள், 3 அக்டோபர், 2016

என்றும் அன்புடன்


 ​
தூய மண் வாசனையை உணர்த்துகின்ற காற்றில் தன் பெயரை அவைகளே அழைக்கும் பிரம்மையோடு நடந்து செல்லும் இவன், செழியன்.   தன்னை வரவேற்கும் தோற்றத்தில் பிரம்மாண்டமாய் நிற்கும் தென்னை மரங்களும், தாரில்லாத செம்மண் சாலையும், சற்றே கடந்ததும் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தியும், குளத்தில் துணி துவைக்க வரும் பெண்களும், மீன் பிடித்து விளையாடும் சிறுவர்களும் அவன் மனதில் ஒரு புதுவிதமான மகிழ்ச்சியையும், கடந்தகால நினைவுகளையும் ஏற்படுத்துவதை உணர்ந்தான்.  எத்தனை கோடி இதற்கு இணையாக முடியும் என்று எண்ணிய அவன் மனதுடன் சேர்ந்து, கண்களும் கலங்கின.  கணநேரத்தில் சற்று தூரத்திலிருந்து ஒரு குரல். பெரியவர் ஒருவர் அருகில் வந்து,

'என்ன காள ரெம்ப நேரமா எதியோ தொலச்சமாரி, தொலவிக்கிட்டே இருக்கீங்களே.  எதாச்சும் காணமா சாமி'

'ஆமாங்கய்யா. மண்ணையும்,
​​
மனுச மக்களையும் தொலைச்சிட்டேன்'
என்று மனதில் கூறிக் கொண்டவனாய், 

​​
'செண்பகம் பாட்டி வீடு எங்க இருக்குங்கய்யா?' என்ற கேள்வியையே பதிலாய் வைத்தான்.

      ​
ஆம், செழியனின் பாட்டி செண்பகம், தாத்தா செல்லப்பன்.  அவனுடைய அம்மா, அப்பா இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.  அப்போது செழியன் 10 வயதைக் கடந்திருக்கக் கூடும்.  வயல்கள், ஆடு, மாடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தன.  பசி, பட்டினியால் அவதிப்பட்ட காலமது.  பசியின் வேகம் ஈட்டியை விட ஆழமாகவே மனதில் பல எண்ணங்களை பாய்ச்சியிருந்தது.  நெல் விளையவில்லை, பழங்கள் இல்லை என்ற வெறுப்பு பசியின் உச்சத்திலிருந்த அவனுடை
​​
ய கோபமே, அந்த மண்ணைவிட்டு இவ்வளவு காலம் பிரித்து வைத்திருந்தது போலும்.  பாவம், பிஞ்சுக் குழந்தைக்கு அப்போது தெரியவில்லை மண்ணின் அருமை. 

12 முடிந்தது.  மேலே படிப்பதற்கு வெளியூர் செல்ல அடம் பிடித்து,

'பாட்டி நான் இங்க இனி இருக்கமாட்டே.  வேற எங்கயாச்சு போயி படிச்சுக்கிறே.  என்ன வேற ஊர்ல படிக்க வையி'

'என்ன ராசா ஒனக்கு இல்லாமயா?', 

என்று பாட்டி எல்லாவற்றையும் விற்று, அனுப்பி வைத்தாள் பாட்டி.

      ​
சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்ற பெருமிதமான சந்தோசத்துடன் பட்டினம் சென்றான்.  படித்தான்.  வீட்டின் சிறு நினைவுகள் கூட வந்து போகவில்லை என்றே சொல்லலாம்.  மனதில் பட்ட பல ஆசைகளும் நிறைவேறவே இந்த சுதந்திரக் காற்றே வாழ்நாள் முழுதும் வேண்டும் என்றெண்ணிய அவன், அந்த காற்றின் தூய்மையை அறிய முற்படாதவனாய் வாழ்வின் அடுத்த படியினை ஏற தயாரானான்.

​      ​
புதிய இடம், முதல் வேலை, மனதில் படபடப்பு, பார்க்கும் இடமெங்கும் பரபரப்புடன் வேலை பார்கும் கணிணிகள், யாரையும் பொருட்படுத்தாமல் அங்குமிங்கும் ஊர்ந்து கொண்டிருக்கும் இருபாலர்களின்  புதிய பார்வை.  இவை அனைத்தும் கொடுத்த அச்சத்தை மட்டுமே வாங்கிக் கொண்டவனாய் திகைத்து நின்றான்.

​      ​
நாட்கள் பலவும் இப்படியும் அப்படியுமாய் ஓட, தன் திறமைக்குரிய இடத்தையும் அடைந்த கர்வத்தோடும் வாழ்க்கையை கடந்து கொண்டிருந்தான்.  இல்லை என்ற சொல்லை மறந்தவனாய், தனிமையே இனிமை என்றவனாய், சூரியனும் என் கையில் என்றவனாய் திரிந்தான்.

வருடங்கள் பல 
கழிந்தன.  

​      ​
திடீர் திருப்பமாய், செழியனின் பொருள் செழிப்பு குறையவில்லை என்றாலும், அவன் உடல் அதற்கு நிகராய் இல்லை.  நாட்கள் கடக்கவே அன்பின் அருமையும், மண்ணின் செழுமையும் ஒருவாறாக மனதினைத் தொட்டுவிட்டே போனது.  உச்சந்தலை முதல் பாதம் முடிய தாய் கிராமத்தை நோக்கியே இழுத்துக் கொண்டிருந்தன.

'சார், சார் கீழே பாத்துப் போங்க', 

ஓர்
 அழகிய மெல்லிய குரல். 

​      ​
அப்போது தன் நினைவலைகளை விட்டு வெளியே வந்தவனாய், சற்றே திரும்பிப் பார்க்க, அத்தனை அழகையும் தனக்குள்ளே புதைத்தாற் போல, சிறிது வெட்கத்தோடு ஓடி மறைந்தாள் அந்தப் பெண்.  பின் பெரியவர் சொன்ன திசை நோக்கிச் சென்று வீட்டை அடைந்தான்.

'பாட்டி... பாட்டி....'

செண்பகம் பாட்டி வெளியே வந்து, தன் தளர்ந்த குரலில்,

 'தம்பி... யாரப்பா?'

'பாட்டி, நா... நான் தான் பாட்டி...', என்ற கணம், செண்பகம் பாட்டி கண்களில் மடை திறந்தாற் போல்,

'ஏய்யா?  என்னய்யா?  இவ்ளோ காலம்?'என்று கட்டித் தழுவிக் கொண்டாள்.

​ ​
​      
ஒவ்வொரு நாளையும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த 
செழியன்
​,​

'தேன்மொழி, கொஞ்சோ த
​​
ண்ணி புள்ள
என்ற கிராமத்து மணம் உடல் எங்கும் வீசுபவனாய், வயலில் உழுது கொண்டிருந்தான்
​​
.  

'வந்துட்டேன் மாமா'என்ற
​​
குரல், வெட்கத்தோடு அன்று ஓடிய அதே பெண்ணின் குரல்.

​      
அன்று
​​
தான்
​, 
தான்
​ ​
அருந்திய நீரில், தன் பெயருக்குரிய செழிப்பையும் அடைந்தவனாய், தன் கண் துடைத்து வேலையைத் தொடர்ந்தான்
​​
செழியன்.
 
________________________________________________________________________________
 
- ராதா

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

சிறுகதைப் போட்டி தொடர்பான இறுதி அறிவிப்பு

'பயிற்சிக்கான முயற்சியில்' இரண்டு கதைகள் கதைகள் மட்டுமே வந்துள்ளன.  எனவே, இதை ஒரு போட்டியாகக் கொள்ள முடியவில்லை.
ஆனால் அந்தக் கதைகள் ஆசிரியரின் அனுமதி பெற்று, தளத்தில் வெளியிடப்படும்.  இதன்மூலம் போட்டிக்கான காலம் முடிவுற்றது என்பது தெரிவிக்கப்படுகிறது, முதல் முயற்சி பெரும்பாலும் சொதப்பும் என்ற புரிதலுடன்.

மற்றபடி, தங்களது படைப்புகளை எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம்.

எதி்ர்பார்ப்புடன்,
உதிர்ப்போம் குழு

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்

காதி கட்டிய கிழவன்
இந்த
பெருங்கிழவன்!
இவன்
மோதி முட்டப் பணிந்தான்
பரந்து கிடந்த பரங்கியன்!.

மூத்திரை சகதியில் இருந்த
இந்த மூத்த இனத்தை
சூத்திரம் செய்து
பத்திரம் செய்தவன்!

இந்த
ஊருக்கு உழைத்தவனை
உலகுக்குச் சேர்த்தது
அவனது உண்மை!

அகிம்சை என்பதே
அவனின் எண்ணம்
அதை போதித்தான்
உலகம் புரியும் வண்ணம்!

உடைந்து கிடந்த இந்தியா
இடிந்து போன இந்தியர்
இகழ்ந்து பார்த்த உலகம்
இவனால்
திரும்பிப் பார்த்த அதிசயம்!

தடி ஊன்றிய தாத்தா
எங்களின் தேசப்பிதா...
நீ ஜனனம் கண்ட இந்நாளில்
உன் மந்திரம் ஜபித்து மகிழ்கிறோம்
வாழ்க பாரதம்!
வளர்க பாரதம்!

- அருண்குமார்

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சிறுகதைப் போட்டி : கால நீட்டிப்பு

பெருவாரியானோரின் விருப்பத்திற்காக சிறுகதைப் போட்டிக்கான கதைகளை அனுப்பும் தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நன்றி,
உதிர்ப்போம் குழு

திங்கள், 26 செப்டம்பர், 2016

காதல் கடிதம் : கவிதை



அனுப்புனர் –
சோ.விமலன்,
S/o நா.சோலைமலை, திண்டுக்கல்-624003,

பெறுநர் -
அப்பா ,
????,
????.

அன்புள்ள அப்பா,

இது மகன் தந்தைக்கு எழுதும் ஒரு காதல் கடிதம் ,
ஆனால்
கடிதத்தை பெற அவர் இல்லாததால் இது ஒரு கானல் கடிதம்...!

கடன் தொல்லையால் நீ செய்து கொண்டாய் தற்கொலை..!
உன்னுடைய பிரிவை விவரிக்க நான் தேடுகிறேன் சொற்களை..!

பணம் இல்லாத காரணத்தால் நீ ஒரு கடனாளி..!
நீ இல்லாத காரணத்தால் கண்ணீரில் கழிகிறது என் நாழி..!

நீ என்னை ஒரு போதும் திட்டியதில்லை கோவமாக..!
அதனால் தான் உன்னுடைய இழப்பு எனக்கு ஆனது சாபமாக..!

நீ நினைத்திருந்தால், ஓடி இருக்கலாம் மதுவின் மயக்கம் தேடி,
வாடி இருக்கலாம் புகையின் பூரணம் பாடி..!
ஆனால்
நீ ஓடியதோ குடும்பத்தின் இன்பத்தை காக்க,
நீ வாடியதோ குடும்பத்தின் கடனை போக்க..!

உண்ண மறந்தாலும் உழைக்க மறக்காத ஒரு பிறவி..!
உன் பிரிவால் உண்ணாமல் உழைக்காமல் இருக்கிறாள் உன் இறைவி..!

நான் பெருமையாகக் கூறுவேன் நான் ஒரு உழைப்பாளியின் மகன் என்று,
அதற்கு நீ தட்டிக் கொடுக்க வேண்டும் என் அருகில் நின்று..!

இல்லை என்று வருபவரிடம் இல்லை என்று சொல்லாத ஒரு நல்ல குணம்..!
நீ இம்மண்ணை விட்டு பிரிகையுள் உன்னிடம் இருந்தது 11 ரூபாய் பணம்..!
நீ செய்த தர்மமும் உன் தலையைக் காக்கவில்லை
நீ செய்த புண்ணியமும் உன் கணக்கில் சேர்க்கவில்லை..!

18 ஆண்டுகள் சபரிமலை சென்றதால் நீ குருசாமி..!
ஆனால்
உன்னுடைய உயிரை காக்கவில்லை ஒருசாமி..!

நான் இந்த கடிதத்தை கண்ணீர் வராமல் எழுத நினைத்தேன், ஆனால் என்னால்
முடியவில்லை..!

எனக்கு பெயர் வைத்த என் தந்தைக்கு இதை அனுப்ப பெறுநர் முகவரி எனக்கு
தெரியவில்லை..!


இப்படிக்கு,
கண்ணீருடன் காதலன்.


எழுதியது - சோ. விமலன்

வியாழன், 8 செப்டம்பர், 2016

தமிழ் எழுத்து - ஒரே குஷ்டமப்பா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன், தமிழில் எழுதி எவ்வளவு நாட்கள் இருக்கும் என்று நினைத்து, எழுதிப் பார்க்க நினைத்தேன்.  எழுத நினைத்தால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.  முதலில் என் பெயரை எழுதினேன்.  கோடை விடுமுறை முடிந்து, எழுதத் தொடங்கும் போது, எழுத மறுக்கும் விரல்களைப் போல, அப்போது என் விரல்களை உணர்ந்தேன்.  எனக்கு பெரும் பயத்தை அளித்தது, அது.  அதை அப்படியே தொடரவிடக்கூடாது என, நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தைத் தொடங்கினேன்.  அது மை ஊற்றும் பேனாவின் மீதான மோகத்தால் ஒன்றரை ஆண்டுகள் தாக்குப் பிடித்தது.  இப்போது பெங்களூர் வந்தபின், சுத்தமாக எழுதவேயில்லை.  மீண்டும் பேனாவை எடுத்துப் பார்த்தேன்.  முடியவில்லை.

இப்போது ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.   ஜெயமோகன் எழுத்துரு பற்றி, தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதினார்.  அதில் தமிழை அப்படியே ஆங்கிலத்தில், அதாவது ஆங்கில எழுத்துருவில் எழுதினால் என்ன தவறு என்று.  அதாவது, நாம் இப்போது குறுஞ்செய்தியில் / வாட்ஸ்-ஆப்-ல் அனுப்புவது போல.  நம் ஆட்கள் கும்மி எடுத்து விட்டார்கள்.  தமிழை அழிக்க யோசனை சொல்லிவிட்டான் மலையாளத்தான் என்றெல்லாம்.  கூட்டம் கூடினால் கூட்டத்தோடு கூடி அடித்துத் தள்ளுவதில் நம் ஆட்கள் தான் கில்லாடிகள் ஆயிற்றே.  அது சரியா இல்லை தவறா என்றெல்லாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்.  ஆனால் அவருக்குத் தோன்றியதை அவர் சொல்லியிருக்கிறார்.  மலாய் மொழி அப்படி வெற்றிகரமாக இயங்கிவருகிறது என்று சொல்லியிருக்கிறார்.  அவர் சொல்லிய தரவுகள், கருத்துக்கள் இவற்றின் மீது தவறு இருப்பின் அவற்றை இன்னொரு கட்டுரையின் மூலம் அவரை அறைந்திருக்கலாம், வெறுமனே வசை பொழிவதை விடுத்து.

எனக்கும் அந்தக் கட்டுரையை வாசித்தபின் பெரும் மனக் கசப்பு அல்லது வருத்தம் அவர் மேல் வந்தது.  தமிழனின் ஆதார உணர்ச்சி அது.  இது கிட்டத்தட்ட தாழ்வுணர்ச்சிக்கு நிகரானது.  நாம் நம்பும் ஒன்றுக்கு மாறாய் யாரேனும் ஏதாகிலும் சொல்லிவிட்டால், சட்டென்று வரும் உயிர்விசை.  அது ஒரு வினைக்கான விசையாய் இருத்தல் வேண்டும், ஆனால் நிலைமை அப்படி அல்லவே.  நமக்கு ஒவ்வாததை ஒருவன் சொல்லிவிட்டால் அவனை எதிரி என்றே எண்ணத் துணிய நம் மனம் பழக்கப்பட்டிருக்கிறது.  இதை மாற்ற இன்னும் இரு பத்தாண்டுகளுக்கு மேலாகவாவது ஆகும், அதுவும் தொடர்ச்சயான வாசிப்பு மற்றும் விவாத மனநிலை கொண்ட ஒரு பெரும் கூட்டம் இருந்தால் மட்டும்.  அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

அதையெல்லாம் விடுவோம்.  இப்போது நம் வீடுகளில், அலுவலகங்களில், பிற இடங்களில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.  என் வீட்டில், அம்மா வழியில் சகோதர மற்றும் மாமன் மக்கள் என்று மொத்தம் ஒன்பது பேர்.  கடைசி இருவரைத் தவிர்த்து, நாங்கள் எல்லோரும் தமிழ் வழிக்கல்வி.  முதல் ஏழு அல்லது எட்டுப் பேர் தமிழைத் தடையற வாசிப்போம்.  கடையிருவர் முறையே ஆங்கில மற்றும் சி.பி.எஸ்.சி வழியில் படிக்கின்றனர்.  ஆங்கில அல்லது சி.பி.எஸ்.சி வழிக்கல்வியில் பிராந்திய மொழிக்கு உரிய முக்கியத்துவம் இல்லை.  அவரவர் கல்விக் கொள்கை அவரவர்க்கு.  ஆனால், அங்கிருந்து வரும் பிள்ளைகள் ஆங்கிலம் தவிர்த்து, சரளமாக வாசிப்பு மற்றும் எழுதுவதில் தடுமாறுவர்.  என் வீட்டில் உள்ள அந்த கடைசி இருவரை ஆங்கில வழிக்கல்விக்குத் தள்ளியது எது?  சமூக நிர்பந்தம் எனில், சமூகம் என்பது எது?  இத்தனைக்கும் மீதமுள்ள எல்லோரும் தமிழ் வழியில் பயின்றோம்.  என் தாத்தாவும் ஆயாவும் படிக்கவில்லை.  எனவே பிள்ளைகள் அனைவரையும் படிக்க வைத்தனர்.  என் அம்மா மற்றும் பெரிய மாமாவைத் தவிர, மீதமுள்ள எல்லோரும் ஆசிரியர்கள்; தமிழ்வழிக் கல்வியில் பயின்ற ஆசிரியர்கள்.  தமிழ்வழிக் கல்வியின் அனைத்து நற்சுவைகளையும் மகிழ்ச்சிகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்த அந்தத் தலைமுறை, அடுத்த தலைமுறையை, பெட்டிக்குள் அடைக்கிறோம் என்று தெரிந்தும், வெகுசிரத்தையோடு, நன்மை தரும் என்று நம்பிக் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள்.  அது எழுத்துப் பயிற்சியை மூன்று மொழிகளில் அளிக்க முயற்சிக்கிறது  ஆங்கிலம், தமிழ் , ஹிந்தி / சம்ஸ்கிருதம் என்று.  குழந்தைகளுக்கு கொஞ்சம், இல்லை இல்லை அதிகமாகவே கடினம்.  இதுபோன்ற நேரங்களில் ஆங்கிலம் மட்டுமே போதுமானதாகத் தோன்றும்.  அதுவே வழக்கத்தில் சரியாகவும் இருப்பதாகத் தோன்றும்.  மாநில / தாய் மொழியைக் கற்றுக் கொள்ளாமலேயே(இங்கு 35-40% தேர்ச்சி மதிப்பெண் கொண்டு, மொழியறிவு உள்ளதாகக் கொள்ளுவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.) பட்டம் பெற்று, வேலை வாங்க முடியும். அதுவே "உன்னத வாழ்க்கை" என்று நம்பப்படுகிறது.

கல்லூரியில் இளம் அறிவியல் பட்டத்தின் போது, என் நண்பன் ஜோன்ஸ் - தமிழ்க்காரன், ஊட்டியில் கான்வென்ட் கல்வி கற்றவன்.  அந்த ஊர்க்காரன் தான்.  நன்றாகத் தமிழ் பேசுவான், இங்கு 'பேசுவான்' என்பது 'பீட்டர் விடுவான்' என்ற வகையிலும் சேரலாம் என்றறிக.  அது சரி, யார்தான் தமிழைத் தமிழ் போலப் பேசுகிறோம். அவனுக்கு படிக்கவும் தெரியும்.  ஆனால் வாசிக்கத் தெரியாது என்று காண்பிப்பதற்காகவே தவறாகவே வாசிப்பான்.  'சென்றான்' என்பதை சரியாக 'சென்றேன்' என்று வாசித்து, பின் வேண்டும் என்றே 'சொன்றான்' என்று வாசிப்பான்.  அது தனக்கு தமிழ் சரியாக வராது என்பதைக் காட்டுவதற்காக, இது எங்களுக்கும் தெரியும்.  அதனால் 'புகைச்சல்' என்ற பட்டப்பெயரையும் பெற்றான்.  ஒருமுறை ஏதோ மொழி தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்போது சுற்றிலும் எல்லோரும் பாய்ந்து அவனை அடிப்பது போல், தமிழைத் தாங்குவதற்காகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அவன் ஆங்கிலம் தான் 'உசத்தி' என்கிற வகையில் பேசிக் கொண்டிருந்தான்.  மீதமுள்ள அனைவரும் தமிழ் தான் என்று கூவிக் கொண்டிருந்தோம்.  அந்தக் கூச்சலில் 'அவனைப் போல் நமக்கு ஆங்கிலம் வரவில்லையே' என்ற கடுப்பும் கலந்திருந்தது.  ஒருகட்டத்தில் மிக சூடான ஒருவார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன்.  கனத்த மௌனம்.  கணநேரத்தில் என்னை நோக்கி அடிக்கப் பாய்ந்தான்.  அதை எதிர்பார்த்ததைப் போல, நான் பாய்ந்து அவனுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.  என்னைப் பிடிக்க முடியாவிட்டாலும், எட்டி அவன் வலது கையால் என் முதுகில் ஒன்று வைத்தான்.  அதன் எரிச்சலை, இதற்குமேல் இவனிடம்  அடிவாங்க முடியாது என்று உணர்ந்த என் மூளை,  மிகத்துரிதமாக அட்ரிலீனைச் சுரக்க, நான் மிக விரைவாக எங்கள் அறைக்குள் புகுந்து, கதவை அடைத்துக் கொண்டேன்.  'தடார் தடார்' என கதவை அறைந்தான் கொஞ்ச நேரம்.  பின் போய்விட்டான்.  இருவரும் ஒரே அறை.  15 நிமிடங்களுக்குப் பின், சமாதனமாகிவிட்டாயிற்று.  பிறகு அன்று முதல் இன்று வரை தமிழ்-ஆங்கிலம் எது உயர்வு என்ற விவாதம் வரும் போதெல்லாம் இருவரும் அமைதியாய் ஒரு புன்னகையோடு இருப்போம்.  அவனில்லாத போது நானும், நானில்லாத போது அவனும் தத்தம் வாதங்களைச் சொல்லிக் கொண்டிருப்போம்.  அதேநேரத்தில், ஜோசப் டாமினிக் டொமினல்(Joseph Domnic Dumnel) என்ற ஆங்கிலோ-இந்தியப் பையன், ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தான்.  அவன் குடும்பப் பெயரை 'டுமீல் டுமீல்' என்று சொல்லி கிண்டலடிப்போம்.  நான் முதன்முதலில் பார்க்கும் ஆங்கிலோ-இந்தியன்.  தெளிவாகத் தமிழ் பேசுவான்.  வாரமலரை எடுத்து வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப்பான்.  மாமா என்றால் ஆங்கிலத்தில் அம்மாவை அழைப்பது அப்படி என்று அவன் பேசும் போது தான் கவனித்து தெரிந்து கொண்டேன்.  அவனிடம் 'எப்டி டாம்னித் தமிழ்லாம் வாசிக்கிற' என்றதற்கு, 'ஸ்கூல்ல ப்ரண்ட்ஸ் கூட பேசி அப்டியே வந்திருச்சுடா' என்றான்.  அவன் வீட்டிலும் பள்ளியிலும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை.  ஆனாலும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவன் தன் முனைப்பால் கற்றுக் கொண்டது.  எழுதுவாயா என்று கேட்டதற்கு, இல்லை அது மட்டும் கஷ்டம் என்று சொன்னான்.  எழுத்துக்களை வடிவம் கடினமாக இருக்கிறது என்றும் தான் பழக முயன்று கொண்டு இருப்பதாகவும் சொல்லியிருந்தான்.

இதிலிருந்து எனக்கு இருமுனைகள் தெரிகின்றது.  ஒன்று தமிழ் தெரிந்த சூழலில் பிறந்து வளர்ந்த, தமிழால் பயனில்லை என்று வெகுவிரைவாக விலகிக் கொண்டிருக்கும் பெருவாரியான கூட்டம்.  இன்னொன்று முடிந்தவரை கற்றுக் கொள்வோம் என்று ஆசைப்பட்டு முயன்று கொண்டிருக்கும் எண்ணிக்கையில் மிக சொற்பமான கூட்டம்.  பெருவாரியான கூட்டம், பிறர் மதிக்க மாட்டார்கள், பொருளியல் ரீதியாக பயன் இல்லை என்று வெகுபாடு பட்டு விரைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.  சிறுகூட்டம், பயன் இல்லை ஆனாலும் தெரிந்து கொள்வோமே என்று படித்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் எழுத்து வடிவம் கடினமாக இருப்பதால், கற்றலின் ஆர்வம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான சூழலில் தமிழின் எழுத்தைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும்.  வாசிக்கவே உளறிக் கொண்டிருக்கும் நாம், எழுதுவதைப் பற்றி யோசனை கூடச் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.  அப்போது எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த செய்ய வேண்டியது என்ன என்று பேசியே ஆக வேண்டும்.  அதற்கு முன் ஒன்று, ஜெயமோகனைக் கும்மியது கிடக்கட்டும்.  இப்போது தொலைக்காட்சிகளில் பாடல் ஓடும் போது கீழே வரும் பாடல் வரிகள், அதற்கு நேயர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் ஆகட்டும், எப்படி வருகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  டீ-சர்ட்களில் எழுதியிருக்கும் தமிழ் வாசகங்கள் எப்படி வருகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  நண்பர்களுக்கு நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் எப்படிப் போகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில், ஆங்கில எழுத்துருவில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா இல்லையா?  விளம்பரத் தட்டிகளில் ஆங்கில எழுத்துருவின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா இல்லையா?  ஏன் இதெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல், இல்லை இல்லை, கண்டோம் ஆனால் இது நடைமுறை சாத்தியம் என்று நம்பி அதை விட்டுவிட்டோம்.  ஆனால், அதையே ஒருவன் இதையே செய்யலாம், அதனால் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கடத்துவது எளிது என்று சொன்னால் அவனைப் போட்டு கும்மி எடுப்போம்.  அதுபோகட்டும்.  எனக்கும் அவர் சொன்னது உடன்பாடு இல்லை, அதாவது ஏற்றுக் கொள்ள இயல்பான, உணர்ச்சிவசமிக்க தமிழ் மனம் ஏற்கத் தயங்குகிறது.  எனவே, அவர் சொன்னதை முறியடிக்க, நான் நாட்குறிப்பு எழுத முயன்று கொண்டிருக்கிறேன்,  குறைந்த பட்சம் நான் மட்டுமாவது , தமிழின் எழுத்தை எழுத தடுமாறாமல் இருக்க.  மாற்றம் எங்கோ எவராலோ முன்னெடுக்கப் படுவதல்ல, அதனால் பத்துவரிகளாவது நாட்குறிப்பாக தினமும் எழுதுவோமா?  இல்லை என்றால் யாராவது ஜெயமோகன் போன்ற ஜாம்பாவான்கள் இது போன்ற கருத்துக்களைக் கூறும்போது, அலறி அடித்துக் கொண்டு கத்தாமல், பணம் பழுக்க வைக்கப் பயன்படும் வேதிப்பொருள்-ஆன ஆங்கிலம் போன்ற மொழிகளை மட்டும் கற்றுக் கொண்டு, பணம் மட்டும் சம்பாதித்துக் கொண்டு 'தெய்வீக வாழ்க்கையை' வாழ்ந்து, நம் தலைமுறைகளை உய்விப்போமாக!  ஆமென்.... 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

பயிற்சிக்காய் ஒரு முயற்சி : சிறுகதைப் போட்டி

வணக்கம் நண்பர்களே!


பதிவுகள் மட்டும் இந்த வலைத்தளத்தின் நோக்கம் அல்ல.  எனவே, 'ஒரு சிறிய சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தினால் என்ன?' என்னும் யோசனை தோன்றியது.  நண்பர்களிடம் கேட்டதில், கிட்டத்தட்ட எல்லோரும் ஆமோதித்தனர்.  ஆக, ஒரு சிறுகதைப் போட்டி வைத்துக் கொள்ளலாம்.  யாரும் இங்கே நிபுணர்கள் இல்லை, மற்றும் இது நம் பயிற்சிக்காக.  தயக்கம் இன்றி அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

இதை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

விதிமுறைகள்:

  • கதைக்கான கரு  என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • 500 வார்த்தைகளாவது இருக்க வேண்டும்.  அதற்குமேல் எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.  பிற பத்திரிக்கைகளிலோ, வலைப் பக்கங்களிலோ பிரசுரிக்கப்படாதவையாக இருக்க வேண்டும்.


கதைகள் அனுப்பக் கடைசி நாள்: செப்டம்பர் 25, 2016

மூன்று பரிசுகளுக்கான கதைகள் தெரிவு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் வெளியிடப் படும்.

கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: uthirppom@gmail.com

தொடர்புக்கு: 91-8675887267



 பங்கேற்கும் அனைவருக்கும், 

பாராட்டும் வகையில், பரிசு உண்டு. 





                                                                 நன்றி மற்றும் எதிர்பார்ப்புகளோடு,



 உதிர்ப்போம் குழு.

ஞாயிறு, 3 ஜூலை, 2016

தீவிரவாதியின் மதம் தீவிரவாதம்

நேற்று டாக்காவில் ஒரு தீவிரவாத தாக்குதல், இன்று இஸ்தான்புல். நாளை எங்கோ?. முதலில் பாரிஸ், பிறகு இஸ்தான்புல், இப்போது டாக்கா.  இன்னும் நிறைய தாக்குதல்கள், மனித உயிர் பலிகள். என்னதான் வேண்டும் இந்த தீவிரவாதிகளுக்கு?  இந்த தீவிரவாதிகளுக்கு யாரு தான் பணம் கொடுகின்றனர்? எங்கிருந்து ஆயுதங்கள் கிடைகின்றன?

முதலில் இஸ்லாம் அல்லது முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. இஸ்லாம் மதத்தில் இருந்து வேறு ஒரு பரிமாணத்தை இவர்கள் உருவாக்கி உள்ளனர். அவர்கள் குரானில் இருந்து வேறு ஒரு மதத்தை உருவாக்கி உள்ளனர். ஆங்கிலத்தில் political ideology. அவர்கள் மதத்தை அரசியலிலும் மற்றும் இஸ்லாம் சம்மந்தமாக இல்லாத எந்த ஒரு பொருளும் அழிக்கப்பட வேண்டியவை என்று ஒரு பார்வை. இது எந்த ஒரு கடவுளும் கூறவில்லை எனபதே நிதர்சனம்.

இவர்களின் மனிதமும் மத பார்வைகள் வேறு. அவர்களை தீவிரவாதம் என்ற மதத்தை பின்பற்றி வருப்பவர்கள். அவர்களில் ஒரு தீவிரவாதியின் பதில், அவர்கள் தான் இஸ்லாம் மதத்தை கண்டுபித்தவர்கள், அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொல்லாம் என்று கூறினான்.  இப்படி ஒன்று குரானில் சொல்லவே இல்லை என்று கூறினார்கள் என் இஸ்லாமிய சகோதர்கள்.
தீவிரவாதிகளுக்கு அவ்ர்கள் போகுமிடம் எல்லாம் ஒரு மன்னன் போல ஆளவேண்டும். அவர்களின் உண்மையான் குறிக்கோள் இது தான். மக்கள் அவர்களின் அடிமையாக வாழவேண்டும். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. நீங்கள் மனிதர்களாக இருந்தாலே போதும் உங்கள் உயிரை அவ்ர்கள் எடுக்க. மதத்தை வைத்து மனிதர்களை ஒதுக்காதீர்கள்.

இன்னோரு தீவிரவாதம் உருவாகும் நாடு அமெரிக்கா. ஆனால் மக்களிடம் தீவிரவாதத்தை ஒழிக்க எல்லோரும் பாடுபட வேண்டும் என்று கதை சொல்லி. தீவிரவாதிகளுக்கு காசும், துப்பாக்கிகளும் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.  ஆனால் மக்கள் யாரும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூற மறுக்கின்றன.  அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஏமாற்றி ஒப்பந்தம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.

ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு மற்ற நாடுகளை அடக்கி கொண்டு ஒரு மறைமுக தீவிரவாதத்தை நடத்திக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , சீனா போன்ற நாடுகள் அமைதி வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் மாதம் ஒரு முறை ஆயுத பயிற்சி நடக்கின்றது. குண்டு சோதனை நடக்கின்றது. இப்படி கூறிக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றிவருகிறது. இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம் என்று எல்லா மத நாடுகளும் மனிதர்களுக்கு எதிராகத்தான் உள்ளது. எந்த மதமும் மனிதர்களைக் கொல்ல சொல்லவில்லை. எந்த கடவுளும் சொல்லவில்லை.
மக்களோ பசி பட்னியில் சாகிறார்கள் அதை பற்றி கவலைப்பட ஒரு நாடும் இல்லை. இதில் இவர்கள் தீவிரவாதிகளை ஒடுக்கப் போகறார்களாம்.
மனிதர்களே மதத்தை கொல்கின்றன. மனிதர்களே மனிதனை கொல்கிறார்கள்.

தீவிரவாதிகளைவிட, மக்களை ஏமாற்றும் சில மனிதர்களை தான் உண்மையான தீவிரவதிகள்.
கடவுள்களின் பெயரில் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த தீவிரவாதிகள்.
தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, மனிதமும் கிடையாது.

~அனந்த் வீரா~

சனி, 2 ஜூலை, 2016

அப்பாவும் நானும் மற்றும் என் நட்பும்

சற்றும் இந்த பெயரை பார்த்த பின்பு என்னால் என்னை கட்டுப்படுத்த இயலவில்லை. ஆம், அப்பா என்கிற பெயரை பார்த்த பின்பு, எதோ ஒன்று என்னை இந்த படம் பார்க்க வேண்டும் என்று சொன்னது.
நான் அப்பாவை மிகச்சரியாக அறியாதவன். என்னுள் ஏதோ ஒரு பேரலை. அவரோடு வாழ்ந்த சிறிய நாட்கள் ஞாபகம் வந்தது.  சமுத்திரக்கனியை  படத்தில் பார்க்கும் போது என் அப்பா இப்படி ஒரு மனிதராய் தான் இருந்திருக்கலாம். என் அம்மா கூறிய சில கருத்துக்கள் என் அப்பாவைப்பற்றி, சொன்னதை வைத்து, ஒரு கோடு போட்டு பார்த்ததில் அவர் இப்படி தான் இருந்திருப்பார் என்று யூகிக்கமுடித்தது.

பள்ளிநாட்களில் இப்படி தான் என்று  வாழ்ந்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். ஆனால் பள்ளியில் இப்படியும் கற்று கொடுக்கலாம் அப்பா படம். வாழ்க்கையில் நண்பர்களை தேடியிருக்கிறேன். பள்ளியில் சில பேர் கல்லுரியில் சில பேர், வேலையில் சில பேர், வாழ்க்கையில் சில பேர் என்று ஒரு சிறிய வட்டம் எனது நண்பர்கள் குடும்பம்.

'ஏன் இந்த படம் எனக்கு பிடித்தது?' என்று கேள்வி. படத்தில் வந்த சில கட்சிகள் நான் எப்படி வளர்க்க ஆசைப்படுகிறேனோ அப்படி இருந்தது. மிக சரியான நட்பு வட்டாரம் வேண்டும் ஒருவன் நல்லவனாக வாழ. எனக்கும் அப்படி ஒரு குடும்பம்.

உணவை தேடி அலையும் போதுகூட, நான் என் நண்பர்கள் பிடியில் இருந்திருக்கிறேன். அவர்கள் சாப்பாட்டை கூட என்னை சாப்பிடவைத்து அழகு பார்த்த என் ஞாபகங்கள். என் அம்மாவிடம் நான் பேசியதை விட அவர்களிடம் பேசியது தான் அதிகம். சில நண்பர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் எப்போதும்.

படத்தை பத்தி எழுத ஆசைப்பட்டேன்.  ஆனால், சில நேரம் பிம்பத்தை விட நிஜத்தை பேச ஆசைப்பட்டேன்.  நான் நன்றி கூற ஆசைப்படுகிறேன் சமுத்திரக்கனிக்கு, எனக்கு சில நியபகங்களை குடுத்ததற்காக. என் நண்பர்களை பற்றியும் என் அப்பாவை பற்றியும் நினைவுடியதற்காக.
அப்பா என் கனவில் ஒருவர், நண்பர்.  நண்பர்கள் என் நிஜத்தில் அப்பாக்கள்.

~ஆனந்த் வீரா~

வெள்ளி, 1 ஜூலை, 2016

ஒரு சிறிய தூக்கம்

தூங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் ஒரு சின்ன கனவு. மதியம் ஒன் இந்தியா இணையத் தளத்தில் படித்த ஸ்வாதி இறப்பின் ஒரு பகிர்வு. அதை நேரில் கண்ட ஒரு மனிதரின் வாக்குமூலம். அவர் கூறிய சில தகவல்கள் என்னை எழுப்பியதா இல்லை, அங்கே மரணத்தின் ஓலம் என்னை எழுப்பியதா எனறு ஒரு யோசனை.
அவர் எப்பொழுதும் போல காலை 6.30 மணிக்கு ரயில் நிலையத்துக்கு வந்து அடைந்தார். என்றும் போல் ரயில் வருவதுக்கான நேரம். திடீர் என்று சதக் சதக் என்று ரெண்டு சத்தம். ஒரு பெண்ணின் மரண ஓலம். அதிர்ச்சி, அங்கு இருந்த எல்லா மக்களுக்கும். மூன்று நிமிடம் அவள் துடித்தாள். பிறகு பக்கத்தில் நின்ற ஒரு பெண் "அவ்வளவுதான்" என்ற சொல் மட்டும் கேட்டது அவர் காதுகளில்.
ஒரு பெண்ணின் கனவுகள், அவள் குடுபத்தின் கனவுகள் மறைந்தது அந்த மூன்று நிமிடங்களில். சட்டென்று என் தூக்கத்தை எழுப்பியது அவளின் சத்தமா இல்லை வேறு யாருக்கும் நடந்துவிடுமோ என்ற பயமா, தெரிய வில்லை.
எனது பெண் நண்பர்களிடம் ஸ்வாதியின் இறப்பு பற்றி கேட்டபோது. அவர்களிடம் கோபத்தை விட பயம் மட்டுமே நான் அறிந்தது.
இந்த பயத்தை போக்க கபாலி ரஜினி வருவாரா இல்லை விஜய் அல்லது அஜித் வருவார்களா என்று தெரிய வில்லை. ஒன்று ஸ்வாதி மரண ஓலம் மக்கள் வெகு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்.
~ ஆனந்த் வீரா ~

முடியைக் கட்டி ஒரு மலை இழுத்தல்

ணக்கம். நண்பர்கள் கூட்டாக இணைந்து கட்டுரைத் தொகுப்பு போல இணையத்தில் எழுதத் திட்டம். இது ஒரு சிறிய முயற்சி. கூட்டாக எழுதுவதில் சிக்கல் எதுவும் இருக்காதென நினைக்கிறேன். வெளி ஆட்கள் படிக்கவிட்டாலும், இதை இதில் எழுதும் குழுவினரின் உரையாடல் களமாக வைத்துக் கொள்ளலாம்.

அனுபவம், இலக்கியம், புத்தக விமர்சனம், திரைப்படம், ஆளுமைகளின் தாக்கம், கடவுள், தல வரலாறு / தகவல்கள், அரசியல், மற்றும் இன்ன பிற அனைத்து தளங்களிலுமான ஒரு கலந்துரையாடல் களமாக இதை வைத்துக் கொள்ளலாம். கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் போன்ற எந்த வடிவ இலக்கியம் சார்ந்த படைப்புகளும் இடம்பெற வைக்கலாம் என்று திட்டம்.

இப்போதைக்கு நாங்கள் மூவர் இருக்கிறோம், .ரஞ்சித் குமார், வீ. ஆனந்த்ராஜ், மற்றும் ஜே. இன்பென்ட் அலோசியஸ்.


முதல் அடிதான். வைத்துத் தான் பார்ப்போமே.  ;)