வியாழன், 8 செப்டம்பர், 2016

தமிழ் எழுத்து - ஒரே குஷ்டமப்பா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன், தமிழில் எழுதி எவ்வளவு நாட்கள் இருக்கும் என்று நினைத்து, எழுதிப் பார்க்க நினைத்தேன்.  எழுத நினைத்தால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.  முதலில் என் பெயரை எழுதினேன்.  கோடை விடுமுறை முடிந்து, எழுதத் தொடங்கும் போது, எழுத மறுக்கும் விரல்களைப் போல, அப்போது என் விரல்களை உணர்ந்தேன்.  எனக்கு பெரும் பயத்தை அளித்தது, அது.  அதை அப்படியே தொடரவிடக்கூடாது என, நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தைத் தொடங்கினேன்.  அது மை ஊற்றும் பேனாவின் மீதான மோகத்தால் ஒன்றரை ஆண்டுகள் தாக்குப் பிடித்தது.  இப்போது பெங்களூர் வந்தபின், சுத்தமாக எழுதவேயில்லை.  மீண்டும் பேனாவை எடுத்துப் பார்த்தேன்.  முடியவில்லை.

இப்போது ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.   ஜெயமோகன் எழுத்துரு பற்றி, தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதினார்.  அதில் தமிழை அப்படியே ஆங்கிலத்தில், அதாவது ஆங்கில எழுத்துருவில் எழுதினால் என்ன தவறு என்று.  அதாவது, நாம் இப்போது குறுஞ்செய்தியில் / வாட்ஸ்-ஆப்-ல் அனுப்புவது போல.  நம் ஆட்கள் கும்மி எடுத்து விட்டார்கள்.  தமிழை அழிக்க யோசனை சொல்லிவிட்டான் மலையாளத்தான் என்றெல்லாம்.  கூட்டம் கூடினால் கூட்டத்தோடு கூடி அடித்துத் தள்ளுவதில் நம் ஆட்கள் தான் கில்லாடிகள் ஆயிற்றே.  அது சரியா இல்லை தவறா என்றெல்லாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்.  ஆனால் அவருக்குத் தோன்றியதை அவர் சொல்லியிருக்கிறார்.  மலாய் மொழி அப்படி வெற்றிகரமாக இயங்கிவருகிறது என்று சொல்லியிருக்கிறார்.  அவர் சொல்லிய தரவுகள், கருத்துக்கள் இவற்றின் மீது தவறு இருப்பின் அவற்றை இன்னொரு கட்டுரையின் மூலம் அவரை அறைந்திருக்கலாம், வெறுமனே வசை பொழிவதை விடுத்து.

எனக்கும் அந்தக் கட்டுரையை வாசித்தபின் பெரும் மனக் கசப்பு அல்லது வருத்தம் அவர் மேல் வந்தது.  தமிழனின் ஆதார உணர்ச்சி அது.  இது கிட்டத்தட்ட தாழ்வுணர்ச்சிக்கு நிகரானது.  நாம் நம்பும் ஒன்றுக்கு மாறாய் யாரேனும் ஏதாகிலும் சொல்லிவிட்டால், சட்டென்று வரும் உயிர்விசை.  அது ஒரு வினைக்கான விசையாய் இருத்தல் வேண்டும், ஆனால் நிலைமை அப்படி அல்லவே.  நமக்கு ஒவ்வாததை ஒருவன் சொல்லிவிட்டால் அவனை எதிரி என்றே எண்ணத் துணிய நம் மனம் பழக்கப்பட்டிருக்கிறது.  இதை மாற்ற இன்னும் இரு பத்தாண்டுகளுக்கு மேலாகவாவது ஆகும், அதுவும் தொடர்ச்சயான வாசிப்பு மற்றும் விவாத மனநிலை கொண்ட ஒரு பெரும் கூட்டம் இருந்தால் மட்டும்.  அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

அதையெல்லாம் விடுவோம்.  இப்போது நம் வீடுகளில், அலுவலகங்களில், பிற இடங்களில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.  என் வீட்டில், அம்மா வழியில் சகோதர மற்றும் மாமன் மக்கள் என்று மொத்தம் ஒன்பது பேர்.  கடைசி இருவரைத் தவிர்த்து, நாங்கள் எல்லோரும் தமிழ் வழிக்கல்வி.  முதல் ஏழு அல்லது எட்டுப் பேர் தமிழைத் தடையற வாசிப்போம்.  கடையிருவர் முறையே ஆங்கில மற்றும் சி.பி.எஸ்.சி வழியில் படிக்கின்றனர்.  ஆங்கில அல்லது சி.பி.எஸ்.சி வழிக்கல்வியில் பிராந்திய மொழிக்கு உரிய முக்கியத்துவம் இல்லை.  அவரவர் கல்விக் கொள்கை அவரவர்க்கு.  ஆனால், அங்கிருந்து வரும் பிள்ளைகள் ஆங்கிலம் தவிர்த்து, சரளமாக வாசிப்பு மற்றும் எழுதுவதில் தடுமாறுவர்.  என் வீட்டில் உள்ள அந்த கடைசி இருவரை ஆங்கில வழிக்கல்விக்குத் தள்ளியது எது?  சமூக நிர்பந்தம் எனில், சமூகம் என்பது எது?  இத்தனைக்கும் மீதமுள்ள எல்லோரும் தமிழ் வழியில் பயின்றோம்.  என் தாத்தாவும் ஆயாவும் படிக்கவில்லை.  எனவே பிள்ளைகள் அனைவரையும் படிக்க வைத்தனர்.  என் அம்மா மற்றும் பெரிய மாமாவைத் தவிர, மீதமுள்ள எல்லோரும் ஆசிரியர்கள்; தமிழ்வழிக் கல்வியில் பயின்ற ஆசிரியர்கள்.  தமிழ்வழிக் கல்வியின் அனைத்து நற்சுவைகளையும் மகிழ்ச்சிகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்த அந்தத் தலைமுறை, அடுத்த தலைமுறையை, பெட்டிக்குள் அடைக்கிறோம் என்று தெரிந்தும், வெகுசிரத்தையோடு, நன்மை தரும் என்று நம்பிக் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள்.  அது எழுத்துப் பயிற்சியை மூன்று மொழிகளில் அளிக்க முயற்சிக்கிறது  ஆங்கிலம், தமிழ் , ஹிந்தி / சம்ஸ்கிருதம் என்று.  குழந்தைகளுக்கு கொஞ்சம், இல்லை இல்லை அதிகமாகவே கடினம்.  இதுபோன்ற நேரங்களில் ஆங்கிலம் மட்டுமே போதுமானதாகத் தோன்றும்.  அதுவே வழக்கத்தில் சரியாகவும் இருப்பதாகத் தோன்றும்.  மாநில / தாய் மொழியைக் கற்றுக் கொள்ளாமலேயே(இங்கு 35-40% தேர்ச்சி மதிப்பெண் கொண்டு, மொழியறிவு உள்ளதாகக் கொள்ளுவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.) பட்டம் பெற்று, வேலை வாங்க முடியும். அதுவே "உன்னத வாழ்க்கை" என்று நம்பப்படுகிறது.

கல்லூரியில் இளம் அறிவியல் பட்டத்தின் போது, என் நண்பன் ஜோன்ஸ் - தமிழ்க்காரன், ஊட்டியில் கான்வென்ட் கல்வி கற்றவன்.  அந்த ஊர்க்காரன் தான்.  நன்றாகத் தமிழ் பேசுவான், இங்கு 'பேசுவான்' என்பது 'பீட்டர் விடுவான்' என்ற வகையிலும் சேரலாம் என்றறிக.  அது சரி, யார்தான் தமிழைத் தமிழ் போலப் பேசுகிறோம். அவனுக்கு படிக்கவும் தெரியும்.  ஆனால் வாசிக்கத் தெரியாது என்று காண்பிப்பதற்காகவே தவறாகவே வாசிப்பான்.  'சென்றான்' என்பதை சரியாக 'சென்றேன்' என்று வாசித்து, பின் வேண்டும் என்றே 'சொன்றான்' என்று வாசிப்பான்.  அது தனக்கு தமிழ் சரியாக வராது என்பதைக் காட்டுவதற்காக, இது எங்களுக்கும் தெரியும்.  அதனால் 'புகைச்சல்' என்ற பட்டப்பெயரையும் பெற்றான்.  ஒருமுறை ஏதோ மொழி தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்போது சுற்றிலும் எல்லோரும் பாய்ந்து அவனை அடிப்பது போல், தமிழைத் தாங்குவதற்காகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அவன் ஆங்கிலம் தான் 'உசத்தி' என்கிற வகையில் பேசிக் கொண்டிருந்தான்.  மீதமுள்ள அனைவரும் தமிழ் தான் என்று கூவிக் கொண்டிருந்தோம்.  அந்தக் கூச்சலில் 'அவனைப் போல் நமக்கு ஆங்கிலம் வரவில்லையே' என்ற கடுப்பும் கலந்திருந்தது.  ஒருகட்டத்தில் மிக சூடான ஒருவார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன்.  கனத்த மௌனம்.  கணநேரத்தில் என்னை நோக்கி அடிக்கப் பாய்ந்தான்.  அதை எதிர்பார்த்ததைப் போல, நான் பாய்ந்து அவனுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.  என்னைப் பிடிக்க முடியாவிட்டாலும், எட்டி அவன் வலது கையால் என் முதுகில் ஒன்று வைத்தான்.  அதன் எரிச்சலை, இதற்குமேல் இவனிடம்  அடிவாங்க முடியாது என்று உணர்ந்த என் மூளை,  மிகத்துரிதமாக அட்ரிலீனைச் சுரக்க, நான் மிக விரைவாக எங்கள் அறைக்குள் புகுந்து, கதவை அடைத்துக் கொண்டேன்.  'தடார் தடார்' என கதவை அறைந்தான் கொஞ்ச நேரம்.  பின் போய்விட்டான்.  இருவரும் ஒரே அறை.  15 நிமிடங்களுக்குப் பின், சமாதனமாகிவிட்டாயிற்று.  பிறகு அன்று முதல் இன்று வரை தமிழ்-ஆங்கிலம் எது உயர்வு என்ற விவாதம் வரும் போதெல்லாம் இருவரும் அமைதியாய் ஒரு புன்னகையோடு இருப்போம்.  அவனில்லாத போது நானும், நானில்லாத போது அவனும் தத்தம் வாதங்களைச் சொல்லிக் கொண்டிருப்போம்.  அதேநேரத்தில், ஜோசப் டாமினிக் டொமினல்(Joseph Domnic Dumnel) என்ற ஆங்கிலோ-இந்தியப் பையன், ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தான்.  அவன் குடும்பப் பெயரை 'டுமீல் டுமீல்' என்று சொல்லி கிண்டலடிப்போம்.  நான் முதன்முதலில் பார்க்கும் ஆங்கிலோ-இந்தியன்.  தெளிவாகத் தமிழ் பேசுவான்.  வாரமலரை எடுத்து வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப்பான்.  மாமா என்றால் ஆங்கிலத்தில் அம்மாவை அழைப்பது அப்படி என்று அவன் பேசும் போது தான் கவனித்து தெரிந்து கொண்டேன்.  அவனிடம் 'எப்டி டாம்னித் தமிழ்லாம் வாசிக்கிற' என்றதற்கு, 'ஸ்கூல்ல ப்ரண்ட்ஸ் கூட பேசி அப்டியே வந்திருச்சுடா' என்றான்.  அவன் வீட்டிலும் பள்ளியிலும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை.  ஆனாலும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவன் தன் முனைப்பால் கற்றுக் கொண்டது.  எழுதுவாயா என்று கேட்டதற்கு, இல்லை அது மட்டும் கஷ்டம் என்று சொன்னான்.  எழுத்துக்களை வடிவம் கடினமாக இருக்கிறது என்றும் தான் பழக முயன்று கொண்டு இருப்பதாகவும் சொல்லியிருந்தான்.

இதிலிருந்து எனக்கு இருமுனைகள் தெரிகின்றது.  ஒன்று தமிழ் தெரிந்த சூழலில் பிறந்து வளர்ந்த, தமிழால் பயனில்லை என்று வெகுவிரைவாக விலகிக் கொண்டிருக்கும் பெருவாரியான கூட்டம்.  இன்னொன்று முடிந்தவரை கற்றுக் கொள்வோம் என்று ஆசைப்பட்டு முயன்று கொண்டிருக்கும் எண்ணிக்கையில் மிக சொற்பமான கூட்டம்.  பெருவாரியான கூட்டம், பிறர் மதிக்க மாட்டார்கள், பொருளியல் ரீதியாக பயன் இல்லை என்று வெகுபாடு பட்டு விரைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.  சிறுகூட்டம், பயன் இல்லை ஆனாலும் தெரிந்து கொள்வோமே என்று படித்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் எழுத்து வடிவம் கடினமாக இருப்பதால், கற்றலின் ஆர்வம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான சூழலில் தமிழின் எழுத்தைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும்.  வாசிக்கவே உளறிக் கொண்டிருக்கும் நாம், எழுதுவதைப் பற்றி யோசனை கூடச் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.  அப்போது எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த செய்ய வேண்டியது என்ன என்று பேசியே ஆக வேண்டும்.  அதற்கு முன் ஒன்று, ஜெயமோகனைக் கும்மியது கிடக்கட்டும்.  இப்போது தொலைக்காட்சிகளில் பாடல் ஓடும் போது கீழே வரும் பாடல் வரிகள், அதற்கு நேயர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் ஆகட்டும், எப்படி வருகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  டீ-சர்ட்களில் எழுதியிருக்கும் தமிழ் வாசகங்கள் எப்படி வருகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  நண்பர்களுக்கு நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் எப்படிப் போகிறது? தமிழிலா அல்லது ஆங்கில எழுத்துருவிலா?  நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில், ஆங்கில எழுத்துருவில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா இல்லையா?  விளம்பரத் தட்டிகளில் ஆங்கில எழுத்துருவின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா இல்லையா?  ஏன் இதெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல், இல்லை இல்லை, கண்டோம் ஆனால் இது நடைமுறை சாத்தியம் என்று நம்பி அதை விட்டுவிட்டோம்.  ஆனால், அதையே ஒருவன் இதையே செய்யலாம், அதனால் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கடத்துவது எளிது என்று சொன்னால் அவனைப் போட்டு கும்மி எடுப்போம்.  அதுபோகட்டும்.  எனக்கும் அவர் சொன்னது உடன்பாடு இல்லை, அதாவது ஏற்றுக் கொள்ள இயல்பான, உணர்ச்சிவசமிக்க தமிழ் மனம் ஏற்கத் தயங்குகிறது.  எனவே, அவர் சொன்னதை முறியடிக்க, நான் நாட்குறிப்பு எழுத முயன்று கொண்டிருக்கிறேன்,  குறைந்த பட்சம் நான் மட்டுமாவது , தமிழின் எழுத்தை எழுத தடுமாறாமல் இருக்க.  மாற்றம் எங்கோ எவராலோ முன்னெடுக்கப் படுவதல்ல, அதனால் பத்துவரிகளாவது நாட்குறிப்பாக தினமும் எழுதுவோமா?  இல்லை என்றால் யாராவது ஜெயமோகன் போன்ற ஜாம்பாவான்கள் இது போன்ற கருத்துக்களைக் கூறும்போது, அலறி அடித்துக் கொண்டு கத்தாமல், பணம் பழுக்க வைக்கப் பயன்படும் வேதிப்பொருள்-ஆன ஆங்கிலம் போன்ற மொழிகளை மட்டும் கற்றுக் கொண்டு, பணம் மட்டும் சம்பாதித்துக் கொண்டு 'தெய்வீக வாழ்க்கையை' வாழ்ந்து, நம் தலைமுறைகளை உய்விப்போமாக!  ஆமென்.... 

2 கருத்துகள்:

  1. எனக்கு தெரிந்து எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு , இருந்தாலும் என்னால மத்தவங்கள போல வாழ முடில , வாழ முடிலனா காசு சம்பாரிக்க முடில , அதுக்கு காரணம் எனக்கு ஆங்கிலம் அவளோ தெளிவா தெரியாது அப்டினு தன நா நெனைக்கற. அதுக்காக தமிழ் ஆஹ் படிக்க கூடாதுனு சொல்லல , என்னால தமிழ் எழுத முடியும் ரொம்ப கவித்துவமா எழுத தெரியாது ஆனா நா என்ன சொல்லனும் நெனைக்கறனோ அத தெளிவா எழுதுவ. இப்படி இருக்கும் போது நா எப்படி யோசிக்க போற? என்னோட அப்பா அம்மா படிக்கல, அவங்க ஒரு வேல கொஞ்சம் படிச்சவங்கல இருந்து இருந்த எனக்கு ஏது வேனும்னு யோசிச்சி இருக்கலாம். நா அவங்கள தப்பா சொல்ல வர்ல, ஏன்னா என்னோட குடும்பத்துல நா தான் கல்லுரி வர போயிருக்க அதுக்கு காரணம் அவங்க தான் இருந்தாலும் அவங்க நெனைக்கற மாறி என்னால என்னோட வாழ்க்கை வாழ முடில. அவங்க என்ன நெனைக்கறாங்க பையன் நெறய படிச்சிடா ரொம்ப நல்லா இருக்க போறான்னு நெனைக்கறாங்க. இப்போ இருக்கற நெலமை நெறய சம்பாரிக்கணும் இல்ல சம்பாரிக்கணும் அதுக்கு எனக்கு தெரிஞ்சி ஆங்கிலம் தெரிஞ்சா ரொம்ப எளிதா சம்பாரிக்கலாம். சொல்லலாம் நா முயற்சி பண்ணல அப்டினு, இல்ல நா படிச்சா பள்ளிக்கூடத்துல எனக்கு இவளோ தான் கத்து குடுத்தாங்க இல்ல என்னால இவளோ தான் கத்துக்க முடிஞ்சது. இப்படி இருக்கும் போது நா என்ன யோசிக்க முடியும் என்னோட பையன் இங்க வாழனும் அதுக்கு அவனுக்கு ஆங்கிலம் தெரியனும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலம் கூடாது என்று சொல்லவில்லை. ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் சம்பாதித்து வாழ முடியும். வேறு எதையும் பெரிதாகத் தெரிந்திருக்க அவசியம் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. என் அலுவலகத்திலேயே வேலை செய்யும் சிலரை இதற்கு எடுத்துக்காட்டாகப் பார்க்கிறேன். ஆகவே இதை மட்டுமே கருத்தில் கொண்டு, நாம் மிக வேகமாக நம் மொழியை உதறிக் கொண்டிருக்கிறோம். அதற்கு நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் காரணம், 'ஒரு புரோஜனமும் இல்ல'. இந்த ஒரு புரோஜனமும் என்பது பொருளியல் சார்ந்தது மட்டுமே. அதுதான் நடைமுறை உண்மையும் கூட.


      இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். தமிழ்வழியில் பயின்ற பலர் என்னோடு பணிபுரிகின்றனர், என்னையும் சேர்த்து. மொழிப்புலமையி்ல் பிறரோடு போட்டி போட முடியாவிட்டாலும், வேலையில் தன்னை நிரூபிக்கும் வேகத்தை நிரூபிக்கும் பொருட்டு மிகத் திறமையானவர்களாக இருப்பார்கள். அதற்கான இன்னொரு ஒளிந்திருக்கும் காரணம், ஆங்கிலம் சரியாக இல்லை, ஆக தொழில்நுட்பத்திலாவது முன்னால் இருக்க வேண்டும் என்ற முனைப்பு.

      அதற்காக நம் மொழியை விட்டுவிடக் கூடாது என்பதே என் எண்ணம். ஆனால், நாம் உதறிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. அதேசமயம் அது குறித்தான குற்ற உணர்ச்சி மட்டும் உள்ளது. அதை மறைக்க, பல சமயம் விவாதங்களி்ல் ஈடுபட்டு, தமிழால் பயனில்லை என்று கதறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த மனநிலை கொண்ட கூட்டம் தான், தமிழின் முக்கியமான ஆளுமை ஒருவர், தமிழ் எழுத்துருவை மாற்றினால் இன்னும் கொஞ்சம் அதன் வீச்சை இளம் தலைமுறையிடம் அதிகரிக்கலாம் என்று முன்மொழிந்தால், தர்மஅடி கொடுக்கக் காத்திருக்கும் வெற்றுக் கூச்சல் கும்பல்.
      நான் அந்த கூட்டத்தில் இருக்க வேண்டாமே என்று நினைத்துதான், நாட்குறிப்பை எழுதலாம் என்று யோசித்தேன். இப்போது அவர் சொன்னதை நினைத்து நான் ஏதேனும் சொன்னால், அது வெற்றுகூச்சலில் சேராது என்று நினைக்கிறேன்.

      -------------------------------------------

      இரஞ்சித்தின் கருத்துக்கு:
      பள்ளியைக் குறை சொன்னாலும், அது கொடுத்த அனுபவத்தை நிராகரிக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். ஆசிரியர்களில் சேவையாய் நினைத்து பணிபுரிந்த ஒரு பெரும்கூட்டம், நாம் படித்ததோடு முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஆங்கிலம் என்ற மொழியால், மெல்லிய வேகத்தடை ஒன்றைத்தான் போட முடியும் என்று நினைக்கிறேன். மற்றபடி ஏறமுடியாது மேடொன்றும் இல்லை. நானறிந்த வரை, நான் பணிபுரிந்த அலுவலகங்களில் வேலையில் பழம் தின்று கொட்டை போடும் ஆசாமிகளில் 90-95 விழுக்காடு தாய்மொழிவழிக் கல்வியில் வந்தோர். ஆங்கிலம் கொஞ்சம் தடுமாறலாம். ஆனால், 3-4 ஆண்டுகள் போதும், கண்றாவி இல்லாத, புரியும்படியான ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். அதை பயற்சி செய்ய சூழல் அமைய வேண்டும் . அவ்வளவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

      நீக்கு